-மூதூர் நிருபர்-
திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் தேர்தல் தொகுதியில் இன்று காலை முதல் ஜனாதிபதி தேர்தலுக்கான வாக்களிப்பு நடவடிக்கைகள் சுமூகமான முறையில் நடைபெற்று வருகிறது.
திருகோணமலை மாவட்டத்தில் வாக்களிப்பு நடவடிக்கைகளுக்காக 318 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.
நான்காயிரம் அரச உத்தியோகத்தர்கள் தேர்தல் நடவடிக்கைகளுக்காக ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.அதேபோல 24 பிரதான வாக்கெண்ணும் நிலையங்களும்,10 அஞ்சல் வாக்கெண்ணும் நிலையங்களும் அமைக்கப்பட்டுள்ளன.
திருகோணமலை மாவட்டத்தில் 315,925 பேர் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளனர். இதில் மூதூர் தேர்தல் தொகுதியில் இருந்து 123,363 வாக்காளர்களும், திருகோணமலை தேர்தல் தொகுதியில் இருந்து 105,005 வாக்காளர்களும், சேருவில தேர்தல் தொகுதியில் இருந்து 87,557 வாக்காளர்களும் வாக்களிக்க தகுதி பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
திருகோணமலை மாவட்டத்தில் இதுவரையில் சுமுகமான முறையில் வாக்களிப்பு நடவடிக்கைகள் இடம் பெற்று வருகின்றன.இதுவரையில் பெரிய அசம்பாவிதங்கள் இடம்பெறவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.