திருகோணமலை போதிராஜ விகாரைக்கு அருகில், கரையோரப் பாதுகாப்புச் சட்டங்களை மீறி புத்தர் சிலையை நிறுவியதாகக் குற்றம் சுமத்தப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த 10 பேருக்கும் திருகோணமலை மேல் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிணையில் செல்ல அனுமதித்துள்ளது.
கடந்த 2025 நவம்பர் 16 ஆம் திகதி, திருகோணமலை பகுதியில் உள்ள கடற்கரைப் பாதுகாப்பு வலயத்தில், உரிய அனுமதியின்றி புத்தர் சிலை மற்றும் சட்டவிரோதக் கட்டுமானங்களை அமைத்ததாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
இச்சம்பவம் தொடர்பாக கரையோரப் பாதுகாப்புத் திணைக்களம் வழங்கிய முறைப்பாட்டின் அடிப்படையில், பலாங்கொட கஸ்ஸப்ப தேரர், திருகோணமலை கல்யாணவங்ச திஸ்ஸ தேரர் (போதிராஜ விகாரையின் விகாராதிபதி) உள்ளிட்ட நான்கு தேரர்களும் ஆறு பொதுமகன்களும் கடந்த ஜனவரி 19 ஆம் திகதி கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டனர்.
முன்னதாக திருகோணமலை நீதவான் நீதிமன்றத்தால் இவர்களுக்குப் பிணை வழங்க முடியாது என அறிவிக்கப்பட்டதைத் தொடர்ந்து, சந்தேகநபர்கள் சார்பில் மேல் நீதிமன்றத்தில் பிணை விண்ணப்பம் தாக்கல் செய்யப்பட்டது.
இன்று இந்த விண்ணப்பத்தைப் பரிசீலித்த மேல் நீதிமன்றம், அவர்கள் நிபந்தனையுடனான பிணையில் செல்ல உத்தரவிட்டது.