-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
மட்டக்களப்பு வவுணதீவுப் பிரதேச செயலகப் பிரிவில் திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உருவாக்கும் செயல் திட்டம் அமுல்படுத்தப்படுவதாக அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்டத்திற்குரிய இணைப்பாளர் அனுலா அன்ரன் தெரிவித்தார்.
இந்த செயல் திட்டத்தின் அமுலாக்க ஆரம்ப நிகழ்வு மட்டக்களப்பு – வவுணதீவு பரமேஸ்வரா வித்தியால பாடசாலை மாணவர்களால் நேற்று செவ்வாய்க்கிழமை ஆரம்பித்து வைக்கப்பட்டது.
நிகழ்வில் பாடசாலை அதிபர் என். கதிராமத்தம்பி தலைமையில் இடம்பெற்ற நிகழ்வில் வவுணதீவு கல்வி வலய கல்விப் பிரதிப் பணிப்பாளர் வை. சி. சஜீவன், கோட்டக்கல்விப் பணிப்பாளர் கே. ரகுகரன், ஆலோசனை வழிகாட்டல் ஆசிரிய ஆலோசகர் ரீ. குணரெட்ணம், ஆலோசனை வழிகாட்டல் ஆசிரியர் யாழினி பிரியகாந்தன் அக்ஷன் யுனிற்றி லங்கா தன்னார்வ வலுவூட்டல் நிறுவனத்தின் இளைஞர் அபிவிருத்தி வலுவூட்டல் செயற்திட்டத்திற்குரிய இணைப்பாளர் அனுலா உள்பட பாடசாலையின் ஆசிரியர்கள் பாடசாலை அபிவிருத்திச் சங்க உறுப்பினர்கள் பெற்றோர் மாணவர்கள் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இப்பாடசாலையில் ஆரம்பித்து வைக்கப்பட்ட திறமையும் ஈடுபாடும் கொண்ட தலைமைத்துவ இளைஞர்களை உருவாக்கும் திட்டத்தின் கீழ் பாடசாலையிலுள்ள மாணவர்களால் சுயமாக ஆக்கபூர்வ புத்தாக்க நிகழ்த்துகைகள் இடம்பெற்றன.
