இலங்கைத் தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் எதிர்வரும் 14ஆம் திகதி இடம்பெறவுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்போது கடந்த 1ஆம் திகதி இடம்பெற்ற தமிழரசுக் கட்சியின் மத்திய செயற்குழு கூட்டத்தில் மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக ஆராயப்படவுள்ளது.
இதேவேளை பிரதான ஜனாதிபதி வேட்பாளர்களது தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, நாடாளுமன்ற உறுப்பினர்களான சிவஞானம் சிறீதரன், எம்.ஏ.சுமந்திரன் உள்ளிட்ட ஆறு பேர் கொண்ட இலங்கைத் தமிழரசுக் கட்சியின் குழு நாளை வவுனியாவில் கூடவுள்ளது என அக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
இக் குழு நியமிக்கப்பட்டதன் பின்னர் எந்த கலந்துரையாடலும் நடத்தப்பட்டிருக்கவில்லை என்றாலும், கடந்த 1ஆம் திகதி நடைபெற்ற செயற்குழு கூட்டத்தில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பதற்குத் தீர்மானிக்கப்பட்டது.
இதனையடுத்து, மாவை சேனாதிராஜா மற்றும் எஸ். சிறீதரன் ஆகியோர் இந்தத் தீர்மானத்தை எதிர்த்துக் கருத்துக்களை வெளியிட்டிருந்தாலும், கட்சி மேற்கொண்டுள்ள தீர்மானத்தை நடைமுறைப்படுத்தும் பொறுப்பு தமக்கு இருக்கிறது என்று கட்சித் தலைவர் மாவை சேனாதிராஜா அறிவித்திருந்தார்.
இந்நிலையில், அடுத்தடுத்தக் கூட்டங்களின் போது சஜித் பிரேமதாசவை ஆதரிக்க மேற்கொண்ட தீர்மானத்தை எவ்வாறு நடைமுறைப்படுத்துவது என்பது தொடர்பாக ஆராயப்படும் என்றும் எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.