மேற்கு ஜெர்மனியில் உள்ள ஒரு வங்கியில், பாரிய துளையிடும் கருவிகளைப் பயன்படுத்தி வங்கியின் பாதுகாப்பு அறையை உடைத்த கொள்ளையர்கள், சுமார் 30 மில்லியன் யூரோ பெறுமதியான பணம், தங்கம் மற்றும் நகைகளைத் திருடிச் சென்றுள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
கெல்சன்கிர்ச்சென் நகரில் உள்ள ஸ்பார்காஸ் வங்கியின் கிளை ஒன்றிலேயே இந்தத் துணிகரக் கொள்ளை இடம்பெற்றுள்ளதாக வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
கொள்ளையர்கள் வங்கியின் பாதுகாப்பு அறையின் சுவரைத் துளையிட்டு உள்ளே நுழைந்துள்ளனர்.
அங்கு வைக்கப்பட்டிருந்த 3,000 க்கும் மேற்பட்ட பாதுகாப்பு வைப்புப் பெட்டிகளை அவர்கள் உடைத்துச் சூறையாடியுள்ளனர்.
வங்கியின் தீயணைப்பு எச்சரிக்கை மணி ஒலித்ததை அடுத்து, சம்பவ இடத்திற்கு வந்த அவசரப் பிரிவினர் பாதுகாப்பு அறை சேதமடைந்திருப்பதையும், வைப்புப் பெட்டிகள் வெறுமையாக இருப்பதையும் கண்டறிந்தனர்.
இந்தத் கொள்ளைச் சம்பவத்தை காவல்துறையினர் “மிகவும் தொழில்முறை ரீதியாகத் திட்டமிட்டு நடத்தப்பட்டது” என்று வர்ணித்துள்ளனர்.
ஹொலிவுட் திரைப்படமான “Ocean’s Eleven” பாணியில் இத்திருட்டு இடம்பெற்றுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் இதனால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
திருடப்பட்ட பொருட்களின் துல்லியமான பெறுமதி இன்னும் கணக்கிடப்பட்டு வருகிறது.
கொள்ளையர்கள் இதுவரை கைது செய்யப்படவில்லை.
சிசிடிவி காட்சிகள் மற்றும் தடயவியல் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டு புலனாய்வுப் பிரிவினர் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.
வங்கி நிர்வாகம் அதிகாரிகளுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்கி வருவதோடு, பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்களைத் தொடர்பு கொள்ளும் பணிகளையும் ஆரம்பித்துள்ளது.

