ஜனாதிபதி இராஜினாமா செய்தால் தான் மக்கள் புரட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும்

-மன்னார் நிருபர்-

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு, மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் தமது பதவிகளை விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி.

பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முறுகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள்தனம், என பாராளுமன்ற உறுப்பினர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்தார்.

மன்னாரில் வைத்து இன்று புதன்கிழமை அவர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

நாடு மிகவும் கொந்தளிப்பான நிலையில் இருந்து கொண்டு இருக்கின்றது. சிங்கள தேசத்தில் போராட்ட வடிவில் பல விடையங்கள் நிகழ்ந்து கொண்டு இருக்கின்றது.

மஹிந்த ராஜபக்ஷவின் ஆரம்ப பிரச்சினையே இன்று பாரிய அளவில் வெடித்துள்ளது.

பொருளாதார பிரச்சனை பின்தங்கிய நிலையிலே இவ்வாறான ஒரு சூழலை உருவாக்கி மஹிந்த ராஜபக்ஷ, ஜனாதிபதி கோட்டபாய ராஜபக்ஷ மற்றும் அவருடைய அரசாங்கம் மிக மோசமான ஒரு சூழலை உருவாக்கி உள்ளது என்பதை பார்க்கும் போது இது ஒரு கண்டனத்திற்குரிய விடயமாக உள்ளது.

வடக்கு கிழக்கில் உள்ள தமிழ் மக்கள் மிக அவதானமாக இருக்க வேண்டும். எங்களுடைய பங்களிப்பு குறித்த விடயங்களில் இருக்கின்ற போது விடுதலைப்புலிகளை காரணம் காட்டி திசை திருப்புகிற கெட்டித்தனம் இந்த அரசாங்கத்திடம் இருக்கின்றது.

விடுதலைப்புலிகளை காரணம் காட்டி சிங்கள மக்களை திசை திருப்புகின்ற ஒரு நிலையை அவர்கள் ஏற்படுத்துவதற்கு நாங்கள் அனுமதிக்க கூடாது.

காலச்சக்கரம் சுழன்று கொண்டு இருப்பதை பார்க்கின்ற போது இந்த மே மாதத்தில் தமிழ் மக்கள் பல்வேறு பிரச்சினைகளை சந்தித்தார்கள்.

உயிர் அவலம் ஏற்பட்டது.மே-18 இல் எமது மக்கள் படுகொலை செய்யப்பட்டார்கள்.

அவர்களின் சடலங்கள் புதைக்கப்பட முடியாத நிலையில் அனாதையாக கைவிடப்பட்டது.

தனது தந்தை உறவுகள் உயிரிழந்து சடலமாக கிடக்கும் போது அதனை தாண்டி வருகின்ற அவலமான சூழ்நிலை ஏற்பட்டது.

மே மாதம் என்பது எமது மக்களின் மனங்களில் நிலைத்து நிற்கின்றது. எங்களுடைய மக்களுக்கு எதிராக செயல் பட்டவர்களுக்கு எதிராக இந்த மே மாதத்தில் நிலமைகள் மாறி இருப்பது கவலை தருகின்ற விடயமாக இருந்தாலும், இறைவன் ஒரு நியாயமான செயல்பாட்டை மேற்கொண்டுள்ளார் என்று நாங்கள் கருத முடியும்.

சிங்கள மக்கள் மத்தியில் நாங்கள் வருத்தத்தை தெரிவித்துக் கொள்கிறோம். அவர்களுக்கும் பாரிய பிரச்சினைகள் ஏற்பட்டுள்ளது.

சிங்கள மக்களால் ஆதரிக்கப்பட்ட சம்மந்தப்பட்டவர்கள் இன்று இந்த மக்களாலேயே துரத்தப்பட்டு பழிவாங்கப்படுகின்றனர்.

காணாமல் ஆக்கப்பட்டவர்களின் போராட்டங்கள் உள்ளிட்ட எமது மக்களின் எதிர்ப்புக்கு மத்தியில் இறைவனின் நாட்டம் எம் மக்களுடன் உள்ளது என்பதை உணர்ந்து கொள்ள முடிகிறது.

எனவே, தமிழர்களாகிய நாங்கள் முழுமையாக குறித்த போராட்டங்களில் இணைந்து கொண்டிருந்தோம் என்றால் இந்த அரசாங்கம், ஜனாதிபதி ஆகியோர் குறித்த போராட்டத்தை எமது பக்கம் திசை திருப்பி, விடுதலைப்புலிகளின் மீளாக்கம் அல்லது விடுதலைப்புலிகள் குறித்த போராட்டத்தில் கலந்து கொண்டுள்ளார்கள், என்று கூறுகின்ற ஒரு நிலைப்பாட்டை இலங்கை அரசாங்கம் ஏற்படுத்தி எங்களுக்கு எதிராக ஒரு வன்முறையை தூண்டி விடுகின்ற வாய்ப்புகள் இருக்கின்றது.

எனவே, தமிழ் மக்கள் மிகவும் அவதானமாக இருக்க வேண்டும்.இக்காலகட்டத்தில் மக்கள் மிகவும் சிரமத்திற்கு உள்ளாகின்றனர்.

ஊரடங்கு சட்டம் அமுல் படுத்தப்பட்டுள்ள நிலையில் நாடு முழுமையாக ஸ்தம்பிதம் அடைந்துள்ளது. அன்றாடம் உழைத்து உண்ணுகின்ற மக்கள் தற்போதைய சூழலில் கஷ்டத்தை எதிர்நோக்குகின்றனர்.

மேலும், எரிவாயு, எரிபொருட்கள் இல்லை. இதனால் விவசாயிகள், மீனவர்கள் ஏனைய கூலி தொழிலாளர்கள் பல்வேறு துயரங்களுக்கு முகம் கொடுத்து வருகின்றனர்.

எனவே, தலைவர்கள் நிதானமாக ஆரம்பத்தில் ஜனநாயக ரீதியில் போராட்டங்கள் இடம் பெற்ற போது அவர்கள் ராஜினாமா செய்ய வேண்டும் என்று கேட்டுக் கொண்ட அந்த சூழ்நிலையில் அந்த விடயத்தை அவர்கள் கையாண்டு இருந்தார்கள் என்றால் இன்று இந்த தலைவர்கள் மக்களினால் மதிக்கப்பட்டிருப்பார்கள்.

ஆனால், அவர்களின் இறுமாப்பு மற்றும் ஆயுதப்போராட்டத்தை எவ்வாறு அடக்கி விட்டோம் என்றது போல் சிங்கள மக்களின் இந்த போராட்டத்தையும் அடக்கலாம் என்று கற்பனையுடன் அவர்கள் செயற்பட்டுள்ளனர்.

அது இன்று வினையாக மாறியுள்ளது.

மஹிந்த ராஜபக்ஷ மற்றும் ஜனாதிபதி ஆகியோர் காலம் கடந்து முடிவுகள் எடுப்பது தவறு. மக்கள் விரும்பவில்லை என்றால் அவர்கள் விட்டுச் செல்ல வேண்டும் என்பதே காலத்தின் நீதி.

பிரச்சினைகளை ஏற்படுத்தி இன முறுகலை தூண்டி விட்டு இழப்புக்களை சந்தித்த பின்பு தமது பதவிகளை ராஜினாமா செய்வது என்பது முட்டாள் தனம்.

மக்கள் இன்றும் பல பிரச்சினைகளை சந்திக்கின்றனர்.

எனவே, ஜனாதிபதி இராஜினாமா செய்ய வேண்டும். அப்போது தான் நாட்டில் ஏற்பட்டுள்ள மக்கள் புரட்சியை முடிவுக்கு கொண்டு வர முடியும், என அவர் மேலும் தெரிவித்தார்.