எதிர்வரும் சுற்றுலாப் பருவத்தில் வெளிநாட்டு சுற்றுலாப் பயணிகளின் வருகையை எதிர்பார்த்து, அவர்களின் பாதுகாப்பை உறுதிப்படுத்தும் நோக்கில் விசேட பாதுகாப்பு வேலைத்திட்டமொன்றை நடைமுறைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக இலங்கை பொலிஸார் தெரிவித்தனர்.
இலங்கைக்கு வரும் சுற்றுலாப் பயணிகளுக்கு பாதுகாப்பான சூழலை உருவாக்குவது கூட்டுப் பொறுப்பாகும் என பொலிஸார் தெரிவித்தனர்.
இதன்படி, மத்திய கிழக்கு மற்றும் கிழக்கு ஐரோப்பாவில் நிலவும் முரண்பாடுகளை கருத்தில் கொண்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பிற்காக விசேட பாதுகாப்பு திட்டத்தை தயாரித்து அமுல்படுத்த இலங்கை பொலிஸ் மற்றும் புலனாய்வு அமைப்புகள் தீர்மானித்துள்ளன.
பாதுகாப்பு அமைச்சு மற்றும் பொது பாதுகாப்பு அமைச்சுடன் இணைந்து இந்த வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.
பதில் பொலிஸ் மா அதிபர் பிரியந்த வீரசூரியவினால் அனைத்து பொலிஸ் நிலையங்களுக்கும் விசேட அறிவுறுத்தல்கள் வழங்கப்படவுள்ள நிலையில் பொலிஸ் சுற்றுலாப் பிரிவு பலப்படுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் இன்று புதன் கிழமை முதல்இ ஏதேனும் பாதுகாப்பு தொடர்பிலான பிரச்சனைகளை 1997 என்ற இலங்கை பொலிஸ் அவசர தொலைபேசி எண்ணுக்குத் தெரிவிக்கலாம் என கூறப்பட்டுள்ளது.
சுற்றுலாப் பயணிகள் மற்றும் அவர்களது உடமைகளைப் பாதுகாக்க நடவடிக்கை எடுக்குமாறு ஹோட்டல் உரிமையாளர்கள் மற்றும் சுற்றுலாத் துறை ஊழியர்களை பொலிஸார் வலியுறுத்தியுள்ளனர்.