சீரற்ற காலநிலை காரணமாக ஏற்பட்ட அனர்த்தங்களினால் இதுவரை 3 பேர் உயிரிழந்துள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களுத்துறை மற்றும் கொழும்பு மாவட்டங்களிலேயே குறித்த மரணங்கள் சம்பவித்துள்ளன.
கடும் மழையினால் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கு உள்ளிட்ட அனர்த்தங்களால் இதுவரை 134, 484 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர்.
குறித்த அனர்த்தங்களினால் மேல் மாகாணத்திலேயே அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேல் மாகாணத்தில் 126,693 பேர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
அனர்த்த நிலைமைகளின் போது 117 என்ற துரித இலக்கத்திற்கோ 0112 136 136, 0112 136 222 அல்லது 0112 670 002 என்ற தொலைபேசி இலக்கத்திற்கோ தொடர்புகொள்ள முடியும் என அனர்த்த முகாமைத்துவ நிலையம் குறிப்பிட்டுள்ளது.
இதேவேளை, நிலவும் மழையுடனான காலநிலையினால் வெள்ளம் குறித்து பொதுமக்கள் அவதானத்துடன் செயற்படுமாறு நீர்பாசனத்திணைக்களம் அறிவுறுத்தல் விடுத்துள்ளது.
இதன்படி, களுகங்கையின் கிளை ஆறுகளான குடா ஓயா மற்றும் மகுரு ஓயாவை அண்மித்த தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்கள் வெள்ளம் குறித்து எச்சரிக்கையுடன் செயற்படுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஜின் கங்கையின் நீர்மட்டமானது பத்தேக பகுதியில் அதிகரித்துள்ளதன் காரணமாக அதனை அண்மித்த தாழ் நிலப்பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
அத்துடன், ஆறுகளை அண்மித்த பகுதிகளில் வள்ளம் செலுத்துதல், நீரில் விளையாடுதல் போன்றவற்றைத் தவிர்க்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.