சீரற்ற காலநிலையினால் நாட்டின் 11 மாவட்டங்களில் 76,000க்கும் அதிகமானோர் பாதிக்கப்பட்டுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
களனி கங்கையின் தாழ் நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களே சீரற்ற காலநிலையினால் அதிகளவில் பாதிக்கப்பட்டுள்ளனர்.
நாட்டை சுற்றியுள்ள வளிமண்டலத்தின் ஏற்பட்டுள்ள தளம்பல் நிலை காரணமாக, சுமார் 5 நாட்களாகப் பலத்த மழை பெய்து வருகிறது.
பலத்த மழை காரணமாகக் கொழும்பு, களுத்துறை கம்பஹா, இரத்தினபுரி, கேகாலை, காலி, குருநாகல், கண்டி, கிளிநொச்சி, பொலன்னறுவை மற்றும் ஹம்பாந்தோட்டை ஆகிய மாவட்டங்கள் பாதிக்கப்பட்டுள்ளன.
கடும் மழை காரணமாக களனி கங்கையின் நீர்மட்டம் கணிசமான அளவு உயர்வடைந்து வருவதுடன், அதன் தாக்கத்தினால் மல்வான, தொம்பே, கடுவலை உட்பட பல பிரதேசங்களின் தாழ் நிலங்களும் பல வீதிகளும் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன.
சீரற்ற காலநிலை காரணமாகப் போக்குவரத்தும் பாதிக்கப்பட்டு அந்த பகுதிகளில் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. கடும் மழையினால் கொலன்னாவ பிரதேசமும் நீரில் மூழ்கியுள்ளது. வெல்லம்பிட்டிய வெலேவத்த, கொஹிலவத்தை உட்பட பல பிரதேசங்களும் நீரில் மூழ்கியுள்ளன.
அதேநேரம், அத்தனகலு மற்றும் ஊறுவல ஓயாவை சுற்றியுள்ள பல தாழ் நிலங்கள் நீரில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, திவுலபிட்டிய, மீரிகம, அத்தனகல்ல, மஹர, கம்பஹா, மினுவாங்கொட, ஜா அல, கட்டான மற்றும் வத்தளை ஆகிய பிரதேசங்களிலும் வெள்ளப்பெருக்கு ஏற்படக்கூடும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. கனமழையினால் மில்லனிய பிரதேசத்தில் பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன
குக்குலே கங்கை நீர்த்தேக்கத்தின் வான் கதவு ஒன்று திறக்கப்பட்டுள்ளதுடன் குடாகங்கை நிரம்பி வழிவதால் புலத்சிங்கள – மொல்காவ வீதியில் பல தாழ் நிலங்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை, வெள்ளம் காரணமாக மூடப்பட்ட தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் வெலிபன்ன இடைமாறல் திறக்கப்பட்டுள்ளதுடன், கடவத்தையிலிருந்து அதிவேக நெடுஞ்சாலையில் வரும் வாகனங்கள் கடுவலையிலிருந்து வெளியேறுவது முற்றாக நிறுத்தப்பட்டுள்ளன.
கடுவலையிலிருந்து கடவத்தைக்கு கனரக வாகனங்கள் மாத்திரமே பிரவேசிக்க முடியும் என காவல்துறை ஊடகப் பேச்சாளர் அலுவலகம் தெரிவித்துள்ளது. அதேநேரம், வென்னப்புவ நகரின் பல பகுதிகளும் நீரில் மூழ்கியுள்ளதாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மழையினால் தொடருந்து மார்க்கம் நீரில் மூழ்கியதன் காரணமாக புத்தளம் தொடருந்து மார்க்கத்தில் போக்குவரத்து லுணுவில வரை மட்டுப்படுத்தப்பட்டுள்ளது.
இதேவேளை, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, குருநாகல், நுவரெலியா, காலி மற்றும் இரத்தினபுரி ஆகிய மாவட்டங்களுக்கு இன்று மாலை 4 மணிவரை தொடர்ந்தும் மண்சரிவு அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.