சிலாபம் கடற்பரப்பில் மீன்பிடிப் படகு கவிழ்ந்ததில் 41 வயதுடைய மீனவர் ஒருவர் உயிரிழந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
உயிரிழந்தவர் சிலாபம் ரிதீவெல்ல பகுதியைச் சேர்ந்தவரும், விபத்துக்குள்ளான மீன்பிடிப் படகின் உரிமையாளருமாவார்.
அவர் மற்றொரு மீனவருடன் நேற்று வியாழக்கிழமை மாலை கடலுக்குச் சென்று மீன்பிடித்துவிட்டு இன்று (03) அதிகாலை கரை திரும்பிக்கொண்டிருந்தபோது, படகு கவிழ்ந்து விபத்துக்குள்ளானதாக ஆரம்பகட்ட விசாரணைகளில் தெரியவந்துள்ளது.
இதன்போது, உடன் சென்ற மற்றொரு மீனவர் வேறொரு மீன்பிடிப் படகினரால் உயிருடன் மீட்கப்பட்டார். பின்னர் உயிரிழந்த மீனவரின் சடலம் மாரவில கடற்பரப்பில் மற்றொரு மீன்பிடிப் படகினரால் மீட்கப்பட்டு, சிலாபம் ஏரிக்கரைக்கு கொண்டு வரப்பட்டது.
சடலம் பிரேதப் பரிசோதனைக்காக சிலாபம் வைத்தியசாலை பிரேத அறையில் வைக்கப்பட்டுள்ளதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை சிலாபம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.