-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
சர்வதேச சிறுவர் தினத்தை முன்னிட்டு சிறுவர் கழகங்களுக்கான விவாதப் போட்டியில் திறமை காட்டியவர்களுக்கு சான்றிதழ்கள் வழங்கி வைக்கப்பட்டுள்ளன.
மட்டக்களப்பு மாவட்டச் செயலாளர் ஜுலேகா ஜஸ்டினா முரளிதரன் முன்னிலையில் பழைய மாவட்ட செயலக மாநாட்டு மண்டபத்தில் விவாதப் போட்டிகள் மாவட்டத்தின் 12 பிரதேச செயலக பிரிவுகளில் உள்ள பிரதேச சிறுவர்சபை உறுப்பினர்களுக்கான விவாத போட்டிகள் செரி நிறுவனத்தின் அனுசரணையுடன் நடைபெற்றன.
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைகள் திணைக்களமும் மாவட்ட செயலகமும் இணைந்து சிறுவர்களின் மொழியாற்றல், பேச்சாற்றல், இலக்கிய அறிவை மேம்படுத்தும் நிகழ்ச்சித்திட்டங்களை செயற்படுத்தி வருகின்றதன் அடிப்படையில் இந்நிகழ்வு இடம்பெற்றது.
சிறார்கள் ஆர்வத்துடன் விவாத போட்டிகளிலும் நுண் உளச்சார்பு போட்டிகளிலும் பங்கு பற்றி தமது திறமைகளை வெளிக்காட்டினர்.
போட்டிகளில் மண்முனை தென்எருவில் பற்று பிரதேச செயலக சிறுவர் கழக அணியினர் வெற்றி வாகை சூடினர்.
மாவட்ட உதவிச் செயலாளர் ஜீ. பிரணவனின் மேற்பார்வையின் கீழ் இந்நிகழ்வில் மாவட்ட சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர் ரீ. மதிராஜ், செரி நிறுவன பிரதி தேசிய பணிப்பாளர் எல். ரூச்சான், மாவட்ட சமூக சேவை உத்தியோத்தர் சந்திரகலா கோணேஸ்வரன், சிறுவர் உரிமை மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், உளவள மேம்பாட்டு உத்தியோகத்தர்கள் ஆகியோரும் கலந்து கொண்டனர்.