-அம்பாறை நிருபர்-
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பகுதியில் நேற்று திங்கட்கிழமை இரவு 11 மணியளவில் வீடொன்றில் ஏற்பட்ட துப்பாக்கி சூட்டில் இளம் குடும்பஸ்தர் மரணமடைந்துள்ளார்.
15 வீதி புளொக் மேற்கு-2 பகுதியை சேர்ந்த ஒரு பிள்ளையின் தந்தையான பக்கீர் முகையதீன் றோஜான் (வயது – 28) என்பவரே இதன் போது உயிர் இழந்துள்ளார்.
சகோதரர்களுக்கிடையில் ஏற்பட்ட வாக்குவாதம் காரணமாகவே குறித்த துப்பாக்கி பிரயோகம் இடம்பெற்றுள்ளதுடன் ரிப்பிட்டர் ரக துப்பாக்கியே குறித்த படுகொலைக்கு பயன்படுத்தப்பட்டுள்ளதாக பொலிஸாரின் ஆரம்ப கட்ட விசாரணையில் இருந்து தெரியவந்துள்ளது.
சம்பவம் தொடர்பில் தம்பி மீது துப்பாக்கி பிரயோகம் மேற்கொண்டவர் என கூறப்படும் சந்தேக நபரான சகோதரரை சம்மாந்துறை பொலிஸார் கைது செய்து மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருவதுடன் சடலம் சம்மாந்துறை ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.
மேலும் குறித்த துப்பாக்கி பிரயோகம் சகோதரர்களிடையே ஏற்பட்ட முன் விரோதம் காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா அல்லது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தல் தொடர்பில் ஏற்பட்ட முரண்பாடு காரணமாக மேற்கொள்ளப்பட்டுள்ளதா என பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.