க.பொ.த சாதாரண தரப் பரீட்சார்த்திகளுக்கு விஷேட அறிவிப்பு

க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எழுதும் பரீட்சார்த்திகளில் பரீட்சை அனுமதி அட்டை கிடைக்காத வர்கள் இலங்கை பரீட்சைகள் திணைக்களத்தின் உத்தியோகபூர்வ இணையத்தளத்தில் பெற்றுக்கொள்ள முடியும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

இது தொடர்பில் கல்வி அமைச்சு விடுத்துள்ள அறிக்கையில் மேலும் குறிப்பிட்டுள்ளதாவது,

உத்தியோகபூர்வ இணையத் தளத்தின் முதற்பக்கத்தில் எமது சேவைகளின் கீழ் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சை 2021 (பரீட்சை அனுமதி பதிவிறக்கங்கள்) ஐகான் தேர்ந்தெடுக்கப்பட்டு, அதன் கீழ் சரியான தேசிய அடையாள அட்டை எண் அல்லது பரீட்சை எண்ணை உள்ளிட்டு, தொடர்புடைய அனுமதி அட்டையின் நகலை பதிவிறக்கம் செய்ய தேவையான வசதிகள் செய்யப்பட்டுள்ளன.

இவ்வருடம் க.பொ.த சாதாரண தரப் பரீட்சைக்கு தோற்றவுள்ள பாடசாலைகள் மற்றும் தனியார் பரீட்சார்த்திகளின் அனுமதி அட்டைகள் தபால் மூலம் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. க.பொ.த சாதாரண தரப் பரீட்சை எதிர்வரும் 23ஆம் திகதி முதல் ஜூன் 1 ஆம் திகதி வரை இடம்பெறவுள்ளது.

நாடு முழுவதும் 3 ஆயிரத்து 844 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது. அனுமதி அட்டையில் பெயர் மாற்றங்கள், பாடத் திருத்தங்கள் மற்றும் மொழித் திருத்தங்கள் ஏதேனும் இருப்பின் அவற்றைச் செய்வதற்கும் வசதிகள் செய்யப்பட்டுள்ளன. எதிர்வரும் 18ஆம் திகதி நள்ளிரவு 12 மணி வரை திருத்தங்கள் மேற்கொள்ளலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது