கொழும்பு கிராண்ட்பாஸ், மாளிகாவத்தை மற்றும் புளுமெண்டல் ஆகிய பொலிஸ் பிரிவுகளில் போதைப்பொருட்கள், நகைகள் மற்றும் சிகரெட்டுகளுடன் மூன்று சந்தேக நபர்கள் கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினரால் நேற்று ஞாயிற்றுக்கிழமை கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினருக்குக் கிடைத்த தகவலின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட மூன்று சுற்றிவளைப்புகளின் போதே சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
கொழும்பு 15, கொழும்பு 10 மற்றும் வெல்லம்பிட்டி ஆகிய பிரதேசங்களைச் சேர்ந்த 22, 30 மற்றும் 55 வயதுடையவர்களே கைது செய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட சந்தேக நபர்களில் ஒருவரிடம் இருந்து 12 கிராம் 330 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 25 பவுண் மதிப்புடைய நகைகள் மற்றும் போதைப்பொருள் விற்பனை மூலம் கிடைத்ததாக கூறப்படும் 92,580 ரூபா பணமும் மற்றவர்களிடம் இருந்து 11 கிராம் 350 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள், 110 போதை மாத்திரைகள் ,160 சிகரெட்டுகள் மற்றும் 10 கிராம் 580 மில்லிகிராம் ஐஸ் போதைப்பொருள் என்பன கைப்பற்றப்பட்டுள்ளன.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை கொழும்பு பொலிஸ் குற்றத்தடுப்பு பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.