-கிரான் நிருபர்-
கிழக்கு மாகாணத்தில் வருடாந்த இடமாற்றத்தினால் பாதிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு நிவாரணம் வழங்குமாறு கோரி இலங்கை ஆசிரியர் சங்கம் மற்றும் பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் குழுவினால் திருகோணமலை மேல் நீதிமன்றில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கு நேற்று செவ்வாய்க்கிழமை விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.
இலங்கை ஆசிரியர் சங்கத்தின் தலைவர் திரு.பிரியந்த பெர்னாண்டோ மற்றும் கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளர், கிழக்கு மாகாண கல்வி அமைச்சின் செயலாளரின் பிரதி நிதி, கிழக்கு மாகாண பொதுச்சேவை ஆணைக்குழுவின் செயலாளரின் பிரதிநிதி ஆகியோர் நேற்று திருகோணமலை மேல் நீதிமன்றில் ஆஜராகியிருந்தனர்.
முறைப்பாட்டாளர்கள் முன்வைத்த உண்மைகளை பரிசீலித்த மேல் நீதிமன்ற நீதிபதி, பாதிக்கப்பட்ட ஆசிரியர் ஒருவருக்கு நிவாரணம் வழங்குவதற்கான காரணங்களை பரிசீலித்து, தேவையான நிவாரணங்களை வழங்குமாறு கிழக்கு மாகாண கல்விப் பணிப்பாளருக்கு கட்டளையிட்டார்.
ஏனைய பாதிக்கப்பட்ட ஆசிரியர்கள் தொடர்பாக ஆட்சேபனைகளை தெரிவிப்பதற்கு சந்தர்ப்பம் வழங்கப் பட்டுள்ளதுடன், அடுத்த வழக்கு மே மாதம் எட்டாம் திகதி மீண்டும் விசாரணைக்கு வர உள்ளதாக இலங்கை ஆசிரியர் சங்கத்தின் மட்டக்களப்பு மாவட்ட மத்திய குழு பிரதிநிதி குறிப்பிட்டார் .