திருகோணமலை, கிண்ணியா அல்-அக்ஸா மகா வித்தியாலயத்தில் அமைந்திருந்த எம்.ஈ.எச். மரூப் கேட்போர் கூடம் இடிக்கப்பட்ட விவகாரத்தில் முறைகேடுகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால் சட்ட நடவடிக்கை எடுக்க அரசாங்கம் தயாராக இருப்பதாக பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார்.
நாடாளுமன்றத்தில் எழுப்பப்பட்ட கேள்விகளுக்குப் பதிலளிக்கும்போதே பிரதமர் இதனைத் தெரிவித்துள்ளார்.
1994ஆம் ஆண்டு நிர்மாணிக்கப்பட்ட குறித்த கேட்போர் கூடம், பயன்படுத்துவதற்குப் பொருத்தமற்ற நிலையில் காணப்பட்டதாகவும், உரிய அதிகாரிகள் மற்றும் பொறியியலாளர்களின் பரிந்துரைகளுக்கு அமைய 2022ஆம் ஆண்டு பெப்ரவரி 15ஆம் திகதி இடிக்கப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.
குறித்த பாடசாலையின் அதிபரால் முன்வைக்கப்பட்ட கோரிக்கைக்கு அமையவும், கிண்ணியா வலயக் கல்விப் பணிப்பாளர் மற்றும் மாவட்டப் பொறியியலாளர் ஆகியோரின் பரிந்துரைகளின் அடிப்படையிலும் இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டதாகக் கிடைத்த தகவல்கள் தெரிவிப்பதாக பிரதமர் கூறினார்.
மேலும், கிழக்கு மாகாணக் கல்விப் பணிப்பாளர், மாகாணப் பொறியியலாளர் மற்றும் முன்னாள் மகளிர் மற்றும் சிறுவர் அபிவிருத்தி, முன்பள்ளி மற்றும் ஆரம்பக் கல்வி, பாடசாலை உட்கட்டமைப்பு மற்றும் கல்விச் சேவைகள் இராஜாங்க அமைச்சின் பொறியியல் பிரிவுக்குப் பொறுப்பான மேலதிக செயலாளர் ஆகியோரின் பரிந்துரைகளுக்கும் அமையவே கேட்போர் கூடம் இடிக்கப்பட்டதாகத் தெரிவித்தார்.
இடிக்கப்பட்ட கேட்போர் கூடத்துக்குப் பதிலாக தற்போது வகுப்பறைக் கட்டடம் ஒன்று பயன்படுத்தப்பட்டு வருவதாகவும், இது தொடர்பான அனைத்து உத்தியோகபூர்வ ஆவணங்களையும் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிப்பதாகவும் பிரதமர் உறுதியளித்தார்.
இந்த விவகாரம் தொடர்பில் முன்வைக்கப்படும் எந்தவொரு கோரிக்கையையும் ஆராய முடியும் எனத் தெரிவித்த அவர், முறைகேடுகள் இடம்பெற்றமை உறுதிப்படுத்தப்பட்டால் அரசாங்கம் சட்ட நடவடிக்கை எடுக்கும் என்றும் மீண்டும் வலியுறுத்தினார்.










