நாட்டின் 18 மாவட்டங்களில் இன்று மாலை அல்லது இரவு வேளைகளில் பலத்த மழை மற்றும் கடும் மின்னல் தாக்கங்கள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் வானிலை எச்சரிக்கையை விடுத்துள்ளது.
மேல், சபரகமுவ, மத்திய, ஊவா மற்றும் வடமேல் மாகாணங்களின் சில பகுதிகளிலும், காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களிலும் 100 மில்லிமீற்றருக்கும் அதிகமான பலத்த மழை பெய்யக்கூடும் என எதிர்வுகூறப்பட்டுள்ளது.
இந்த எச்சரிக்கை நாளை வியாழக்கிழமை காலை 8.30 மணி வரை அமுலில் இருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, கொழும்பு, கம்பஹா, களுத்துறை, காலி, மாத்தறை, அம்பாந்தோட்டை, பதுளை, மொனராகலை, கண்டி, மாத்தளை, நுவரெலியா, இரத்தினபுரி, கேகாலை, குருநாகல், புத்தளம், அநுராதபுரம், பொலன்னறுவை மற்றும் அம்பாறை ஆகிய 18 மாவட்டங்களின் முழுமையான அல்லது சில பகுதிகளுக்கு இந்த எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பலத்த மழை காரணமாகப் பின்வரும் பாதிப்புகள் ஏற்படக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் எச்சரித்துள்ளது.
- தாழ்நிலப் பகுதிகள், வீதிகள் மற்றும் குடியிருப்புப் பகுதிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்படுதல்.
- ஆழமான அல்லது வேகமாகப் பாயும் வெள்ள நீரினால் உயிருக்கு ஆபத்து ஏற்படுதல்.
- வீதிகள் மூடப்படுதல் மற்றும் போக்குவரத்துத் தடைகள் ஏற்படுதல்.
- மின்சாரம் உள்ளிட்ட அத்தியாவசிய சேவைகள் பாதிக்கப்படுதல்.
- மண்சரிவு, பாறைகள் சரிந்து விழுதல் மற்றும் மண் அரிப்பு ஏற்படுதல்.
இடியுடன் கூடிய மழை பெய்யும் சந்தர்ப்பங்களில் மணிக்கு 60 முதல் 70 கிலோமீற்றர் வேகத்தில் பலத்த காற்று வீசக்கூடும் என்பதுடன், கடற்பிரதேசங்களும் தற்காலிகமாக மிகவும் கொந்தளிப்பான நிலையில் காணப்படலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, பொதுமக்கள் உத்தியோகபூர்வ வானிலை அறிவிப்புகளைத் தொடர்ந்து அவதானிக்குமாறும், வெள்ளம் மற்றும் மண்சரிவு தொடர்பான எச்சரிக்கைகளைப் பின்பற்றுமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளனர்.
மேலும், ஆபத்தான பகுதிகளில் வசிப்பவர்கள் தேவை ஏற்படின் பாதுகாப்பான இடங்களுக்கு வெளியேறுவதற்குத் தயாராக இருக்குமாறும் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளனர்.











