தவறான தகவல்கள், மூடநம்பிக்கைகள், பாகுபாடுகள் மற்றும் தீங்கு விளைவிக்கும் சமூகப் போக்குகளை ஊக்குவிக்கும் விளம்பரங்கள் மற்றும் உள்ளடக்கங்களைக் கட்டுப்படுத்தும் நோக்கில் புதிய சமூக நெறிமுறைக் கட்டமைப்பை அறிமுகப்படுத்த அரசாங்கம் திட்டமிட்டுள்ளதாக பெண்கள் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல்ராஜ் தெரிவித்துள்ளார்.
சாதியைக் குறிப்பிட்டு பாகுபாடுகளை ஊக்குவிக்கும் வகையில் பத்திரிகைகளில் வெளியிடப்படும் விளம்பரங்கள் தொடர்பில் ஊடகவியலாளர் ஒருவர் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்தபோதே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஆண்களையும் பெண்களையும் தவறாக வழிநடத்தும் வகையில், மூடநம்பிக்கைகள், மந்திரங்கள், வசியம் மற்றும் ஏனைய மாந்திரீகச் செயற்பாடுகளை ஊக்குவிக்கும் பல்வேறு விளம்பரங்களும் வெளியிடப்படுவதாக அமைச்சர் சுட்டிக்காட்டியுள்ளார்.
குறிப்பாக, சமூக ஊடகங்களில் பல்வேறு எண்ணெய்கள் மற்றும் ஏனைய பொருட்களை விளம்பரப்படுத்தி, அவற்றின் மூலம் மந்திரம் மற்றும் வசியம் போன்ற செயற்பாடுகளை மேற்கொள்ள முடியும் எனப் பிரசாரம் செய்யப்படுவதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
“சமூகத்தையும் அடுத்த தலைமுறைச் சிறுவர்களையும் தவறாக வழிநடத்தி, அவர்களின் சிந்தனைகளைச் சீர்குலைக்கும் மிக மோசமான தரத்திலான விளம்பரங்களாக இவை காணப்படுகின்றன” என அமைச்சர் தெரிவித்துள்ளார்.
சமூகம் முன்னோக்கிச் செல்வதை உறுதிப்படுத்துவதே முன்மொழியப்பட்டுள்ள சமூக நெறிமுறைக் கட்டமைப்பின் நோக்கம் எனக் குறிப்பிட்ட அவர், விளம்பரங்கள், கலை, ஊடகம் மற்றும் இலக்கியம் உள்ளிட்ட அனைத்துத் துறைகளிலும் இந்த நெறிமுறைகள் நடைமுறைப்படுத்தப்பட வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார்.
இதேவேளை, சமூக ஊடகச் சுரண்டல்களிலிருந்து சிறுவர்களைப் பாதுகாப்பதற்கும், நெறிமுறைகளுக்கு முரணான செய்தி அறிக்கையிடலைக் கட்டுப்படுத்துவதற்கும் புதிய தேசிய ஊடக வழிகாட்டுதல்கள் மற்றும் சட்டங்களை அறிமுகப்படுத்தும் நடவடிக்கைகளிலும் அரசாங்கம் ஈடுபட்டுள்ளதாக அமைச்சர் மேலும் தெரிவித்துள்ளார்.










