மாவட்ட மட்டத்திலான அபிவிருத்தித் திட்டங்களைத் துரிதப்படுத்துவதுடன், அரச நிதியை வினைத்திறனாகவும் பயனுள்ள வகையிலும் முகாமைத்துவம் செய்யுமாறு ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
ஒதுக்கப்பட்ட நிதி உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாமல் செலவிடப்படாது எஞ்சியிருந்தால், அது மீண்டும் பொதுத் திறைசேரிக்குத் திரும்பிவிடும் என்றும் ஜனாதிபதி எச்சரித்துள்ளார். திறக்கப்பட்ட கடன் உறுதிக் கடிதங்கள் (Letters of Credit) போன்ற விசேட நிபந்தனைகள் பூர்த்தி செய்யப்பட்டிருந்தால் மாத்திரமே சில நிதி ஒதுக்கீடுகளைத் தொடர்ந்து பயன்படுத்த முடியும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
2026 நவம்பர் 23ஆம் திகதி நாடாளுமன்றத்தில் நடைபெற்ற நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சுசார் ஆலோசனைக் குழுக் கூட்டத்தில் உரையாற்றிய ஜனாதிபதி, ஒவ்வொரு நிதியாண்டின் ஆரம்பத்திலிருந்தே அமைச்சுக்கள் மற்றும் நிறுவனங்கள் தமது அபிவிருத்தித் திட்டங்களைத் திட்டமிட்டு, அவற்றின் முன்னேற்றத்தை மாதாந்தம் மீளாய்வு செய்ய வேண்டும் என வலியுறுத்தினார்.
மாவட்ட அபிவிருத்திக் குழுக்களுக்கு வழங்கப்பட்டுள்ள திட்ட அறிக்கைப் புத்தகத்தைப் பயன்படுத்தி, மாவட்ட மட்டத்தில் முன்னெடுக்கப்படும் திட்டங்களின் முன்னேற்றத்தையும் கண்காணிக்க வேண்டும் என அவர் தெரிவித்தார். உரிய நிபந்தனைகளைப் பூர்த்தி செய்யாத நிலையில் எஞ்சும் நிதியை அடுத்த ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்தின் ஊடாக மீண்டும் கோர வேண்டிய நிலை ஏற்படும் என்றும் குறிப்பிட்டார்.
இதன்போது, விவசாயிகளுக்கான உர மானியம் மற்றும் பெரும்போக அறுவடை முகாமைத்துவம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது. அடுத்த பெரும்போக அறுவடை ஆரம்பமாவதற்கு முன்னர், களஞ்சியசாலைகளில் தற்போது காணப்படும் நெல் இருப்புகளை அரிசியாக மாற்றி நலன்புரித் திட்டங்களுக்கு விநியோகிப்பது அல்லது கால்நடைத் தீவனம் உள்ளிட்ட வேறு தேவைகளுக்குப் பயன்படுத்துவது குறித்தும் ஆராயப்பட்டது.
முதலீடுகளை ஊக்குவிப்பது தொடர்பில் கருத்துத் தெரிவித்த ஜனாதிபதி, வரிச் சலுகைகளை வழங்குவது மாத்திரம் முதலீடுகளை ஈர்ப்பதற்குப் போதுமானதல்ல எனக் குறிப்பிட்டார். முதலீட்டாளர்களுக்கான காணிகளை விரைவாக ஒதுக்கீடு செய்வதன் அவசியத்தையும் வலியுறுத்தினார்.
தற்போது முதலீட்டுக்கான காணிகளைப் பெற்றுக்கொள்வதற்கு சுமார் 18 மாதங்கள் தேவைப்படுவது முதலீடுகளுக்குத் தடையாக அமைந்துள்ளதாகவும் சுட்டிக்காட்டப்பட்டது. இதற்குத் தீர்வாக அரச காணிகளை அடையாளம் கண்டு, அவற்றை முதலீட்டுச் சபையின் கீழ் அல்லது விசேட காணி வங்கியொன்றின் கீழ் கொண்டுவருவது குறித்தும் கலந்துரையாடப்பட்டது.
மேலும், முதலீட்டின் அளவு, உருவாக்கப்படும் வேலைவாய்ப்புகள் மற்றும் தேசியப் பொருளாதாரத்துக்கான பங்களிப்பு ஆகியவற்றின் அடிப்படையில் காணிகளை விரைவாக ஒதுக்கீடு செய்வதற்கான விசேட நடைமுறையொன்றை உருவாக்குவது குறித்தும் ஆராயப்பட்டது.
இதற்கு மேலதிகமாக, கிரிப்டோ நாணயங்களைக் கட்டுப்படுத்துவதற்கான ஒழுங்குமுறைகள், காப்புறுதி மற்றும் பரிவர்த்தனைத் துறைகளின் டிஜிட்டல் மயமாக்கல், கூட்டுறவுச் சங்கங்கள் எதிர்கொள்ளும் பெறுமதி சேர் வரி (VAT) தொடர்பான பிரச்சினைகள் குறித்தும் கூட்டத்தில் கவனம் செலுத்தப்பட்டது.
இக்கூட்டத்தில் தொழில் அமைச்சர் மற்றும் நிதி, திட்டமிடல் பிரதி அமைச்சர் கலாநிதி அனில் ஜயந்த, பொருளாதார அபிவிருத்தி பிரதி அமைச்சர் நிஷாந்த ஜயவீர, நாடாளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சின் அதிகாரிகள் உள்ளிட்டோர் கலந்துகொண்டனர்.










