பிரித்தானியாவின் லெய்செஸ்டர் பல்கலைக்கழகத்தின் தலைவர் மற்றும் துணைவேந்தர் பேராசிரியர் சேர் நிஷான் கனகராஜா, பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரியவை நாடாளுமன்றத்தில் இன்று புதன்கிழமை சந்தித்துக் கலந்துரையாடியுள்ளார்.
இலங்கைக்கும் ஐக்கிய இராச்சியத்திற்கும் இடையிலான உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சித் துறை ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்துவது தொடர்பில் இதன்போது கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
இலங்கை வந்துள்ள பேராசிரியர் நிஷான் கனகராஜாவை வரவேற்ற பிரதமர், உயர்கல்வித் துறைக்கு அவர் ஆற்றிய பங்களிப்பைப் பாராட்டி, மூன்றாம் சார்லஸ் மன்னரால் அண்மையில் அவருக்கு வழங்கப்பட்ட நைட் பட்டத்துக்கும் வாழ்த்துத் தெரிவித்தார்.
இதன்போது, கல்விசார் கூட்டாண்மைகள், கூட்டு ஆராய்ச்சித் திட்டங்கள் மற்றும் அறிவுப் பரிமாற்றம் உள்ளிட்ட விடயங்கள் குறித்து இருதரப்பினரும் கலந்துரையாடினர். இலங்கை மாணவர்களுக்கான உயர்கல்வி வாய்ப்புகள் மற்றும் கல்வித் திட்டங்களுக்கான அணுகலை விரிவுபடுத்துவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் பேராசிரியர் நிஷான் கனகராஜா எடுத்துரைத்தார்.
இலங்கையின் கல்வி முறைமையில் அரசாங்கம் முன்னெடுத்து வரும் மறுசீரமைப்புகள் குறித்து விளக்கமளித்த பிரதமர், தொழிற்கல்வியை தேசியக் கல்வி முறைமையுடன் ஒருங்கிணைத்து மேம்படுத்துவதன் அவசியத்தை வலியுறுத்தினார். உயர்கல்வியைத் தொடர்வதற்கும் வேலைவாய்ப்புகளைப் பெற்றுக்கொள்வதற்கும் தொழிற்கல்வி ஒரு மதிப்புமிக்க பாதையாக அங்கீகரிக்கப்பட வேண்டும் என்றும் அவர் குறிப்பிட்டார்.
மாறிவரும் உலகின் சவால்களுக்கு ஏற்ற திறன்களுடன் இளைஞர்களைத் தயார்படுத்துவதுடன், நாட்டின் கல்வி முறைமையை மாற்றியமைப்பதே இந்த மறுசீரமைப்புகளின் நோக்கம் எனவும் பிரதமர் தெரிவித்தார்.
செயற்கை நுண்ணறிவு மற்றும் விண்வெளிப் பொறியியல் உள்ளிட்ட வளர்ந்து வரும் மற்றும் முன்னுரிமைத் துறைகளில் ஆராய்ச்சி மற்றும் கல்விசார் ஒத்துழைப்புகளை ஏற்படுத்துவதற்கும் அவர் வரவேற்புத் தெரிவித்தார்.
அதேவேளை, உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சிக்காக இலங்கை மாணவர்கள் வெளிநாடுகளுக்குச் செல்ல வேண்டிய தேவையைக் குறைக்கும் வகையில், உள்நாட்டிலேயே உயர்கல்வி மற்றும் ஆராய்ச்சி வாய்ப்புகளை விரிவுபடுத்துவதன் முக்கியத்துவத்தையும் பிரதமர் வலியுறுத்தினார்.
இலங்கை மாணவர்களுக்கு சர்வதேச அனுபவம், ஆராய்ச்சி மற்றும் கல்விசார் வாய்ப்புகளை உருவாக்கும் நோக்கில் எதிர்காலத்திலும் ஒத்துழைப்புகளை முன்னெடுக்க இருதரப்பினரும் இணக்கம் தெரிவித்தனர்.










