மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – கலேவெல பகுதி நிர்மாணப் பணிகள் எதிர்வரும் டிசம்பர் 1ஆம் திகதி ஆரம்பிக்கப்படவுள்ளதாக மகளிர் மற்றும் சிறுவர் விவகார பிரதி அமைச்சர் நாமல் சுதர்ஷன தெரிவித்துள்ளார்.
இதற்காக 240 பில்லியன் ரூபாவுக்கும் அதிகமான நிதி ஒதுக்கீடு செய்யப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
குருநாகலில் இன்று புதன்கிழமை நடைபெற்ற நிகழ்வொன்றில் உரையாற்றிய அவர், குறித்த நிர்மாணப் பணிகள் ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்கவின் பங்கேற்புடன் கலேவெலவில் நடைபெறவுள்ள நிகழ்வில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படுமென தெரிவித்தார்.
மத்திய அதிவேக நெடுஞ்சாலையின் குருநாகல் – தம்புள்ளை பிரிவின் ஒரு பகுதியாக முன்னெடுக்கப்படும் இந்தத் திட்டம், மூன்றரை வருடங்களுக்குள் நிறைவு செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.
இந்தத் திட்டத்திற்கான முழுமையான நிதியும் உள்நாட்டு நிதி மூலங்களிலிருந்தே பெற்றுக்கொள்ளப்படவுள்ளதாகவும், இதற்காக வெளிநாட்டுக் கடன்கள் எதுவும் பெறப்பட மாட்டாதெனவும் பிரதி அமைச்சர் தெரிவித்தார்.
கடந்த இரண்டு வருடங்களாக அரசாங்கம் கடைப்பிடித்த நிதி ஒழுக்கம் மற்றும் மேற்கொண்ட தியாகங்கள் ஊடாக இந்தத் திட்டத்திற்குத் தேவையான நிதி திரட்டப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் குறிப்பிட்டார்.










