2019ஆம் ஆண்டு உயிர்த்த ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல்கள் தொடர்பான விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுக்கு விதிக்கப்பட்டுள்ள வெளிநாட்டுப் பயணத் தடையைத் தற்காலிகமாக நீக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையை கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை நிராகரித்துள்ளது.
சிங்கப்பூரிலுள்ள மவுண்ட் எலிசபெத் வைத்தியசாலையில் இருதய சத்திரசிகிச்சை செய்துகொண்டதைத் தொடர்ந்து, மேலதிக மருத்துவப் பரிசோதனைகள் மற்றும் சிகிச்சைகளைப் பெற்றுக்கொள்வதற்காக சிங்கப்பூர் செல்ல அனுமதி வழங்குமாறு முன்னாள் ஜனாதிபதி நீதிமன்றத்தில் கோரியிருந்தார்.
உயிர்த்த ஞாயிறு தாக்குதல்கள் தொடர்பான தொடர்ச்சியான விசாரணைகளின் ஒரு பகுதியாக, கடந்த 2026ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் திகதி அவருக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டிருந்தது.
இதற்கு முன்னர் நடைபெற்ற நீதிமன்ற விசாரணையின்போது, முன்னாள் ஜனாதிபதி தொடர்பான விசாரணைகள் இறுதிக்கட்டத்தை நெருங்கியுள்ளதாக மேலதிக சொலிசிட்டர் ஜெனரல் திலீப பீரிஸ் நீதிமன்றத்திற்கு அறிவித்திருந்தார். எனினும், அச்சந்தர்ப்பத்தில் அவர் சந்தேகநபராகப் பெயரிடப்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டிருந்தது.
இந்நிலையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ இன்று கோட்டை நீதவான் பசன் அமரசேன முன்னிலையில் ஆஜரானபோது, அவரது கோரிக்கை தொடர்பான தீர்ப்பு அறிவிக்கப்பட்டது.
இதேவேளை, உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணைகளுடன் தொடர்புடைய வகையில் பயங்கரவாதத் தடைச் சட்டத்தின் (PTA) கீழ் தம்மைக் கைது செய்வதைத் தடுக்குமாறு கோரி முன்னாள் ஜனாதிபதி தாக்கல் செய்துள்ள மேன்முறையீட்டு மனுவை விசாரணைக்கு எடுத்துக்கொள்வதற்காக, மற்றுமொரு வழக்கில் உச்ச நீதிமன்றம் 2027ஆம் ஆண்டு மார்ச் 5ஆம் திகதியை நிர்ணயித்துள்ளது.










