-ஏ.எச்.ஏ. ஹுஸைன்-
போதைப் பொருள் பாவனை அதனால் இடம்பெறும் சிறுவர் துஷ்பிரயோகம் என்பனவற்றுக்கெதிராக நாடாளாவிய விழிப்புணர்வை ஏற்படுத்தும் நோக்கில் முஸ்லிம் மாணவியொருவர் சைக்கிளோட்டிச் சென்று கொழும்பை அடைந்து ஜனாதிபதியைச் சந்தித்து மகஜர் கையளிக்கும் நோக்கில் சுமார் 230 கிலோமீற்றர் பயணத்தை ஆரம்பித்துள்ளார்.
காத்தான்குடி பத்ரியா வித்தியாலயத்தில் பத்தாம் தரத்தில் கல்வி கற்கும் பாத்திமா நதா என்ற இந்த மாணவி இன்று திங்கட்கிழமை காலை காத்தான்குடியிலிருந்து ஆரம்பித்துள்ள சைக்கிள் பயணம் எதிர்வரும் ஞாயிறன்று கொழும்பை அடையும் என்று அவர் நம்புகிறார்.
சரித்திரத்தில் காத்தான்குடியிலிருந்து சைக்கிளை ஒரு மாணவி கொழும்பை நோக்கிச் செல்வது இதுதான் முதல் தடை என்று ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.
கொழும்பு நோக்கிய தனது விழிப்புணர்வுப் பயணத்தை ஆரம்பிக்கும் முன்னர் கருத்துத் தெரிவித்த மாணவி பாத்திமா நதா, “இது சிறுவர் துஷ்பிரயோகம் மற்றம் போதைப் பொருளற்ற எதிர்கால சமுதாயத்தை கட்டியெழுப்புவதற்கான பயணமாக இருக்கும். சமகாலத்தில் சிறுவர்கள் தொடக்கம் பெரியவர்கள் வரை போதைப் பொருள் பாவினைக்கு அடிமையாகிக் கொண்டு வருகின்றார்கள்.
போதையின் தாக்கம் அவர்களது தனிப்பட்ட வாழ்விலும் குடும்ப வாழ்க்கையிலும் மிகுந்த பாதிப்பை ஏற்படுத்தி வருகிறது. இதனைத் தடுப்பதற்கான விழிப்புணர்வை எல்லோரும் பெற வேண்டும் என்பதற்காக இந்தப் பயணத்தை மேற்கொள்ளவுள்ளேன்.
இந்த உத்தேச 7 நாள் பயணத்தின் இறுதியில் கொழும்பை அடைந்து அங்கு ஜனாதிபதி மாளிகைக்குச் சென்று ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவிடம் நாட்டில் போதைப் பொருள் விற்பனையையும், பாவனையையும் முற்றாகத் தடுக்கக் கோரும் மகஜரைக் கையளிக்கவுள்ளேன்” என்றார்.