களுத்துறை பண்டாரகம, கம்மன்பில குளத்திற்கு அருகில் இன்று ஞாயிற்றுக்கிழமை அதிகாலை இடம்பெற்ற வாகன விபத்தில் இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
பண்டாரகம, அந்துன்வென்ன பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய கடற்படை உறுப்பினரே இதன்போது உயிர் இழந்துள்ளார்.
உயிரிழந்த இளைஞன் பண்டாரகம, வேவிட்ட பகுதியில் உள்ள தனது காதலியின் வீட்டில் இருந்து வீடு திரும்பும் போது கார் வீதியை விட்டு விலகி மின்சார தூணுடன் மோதி 15 அடி பள்ளத்தில் வீழ்ந்து விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்தின்போது வீதியால் பயணித்த வாகனங்களின் சாரதிகள், பிரதேசவாசிகளின் உதவியுடன் உயிரிழந்த இளைஞனை மீட்டு வைத்தியசாலையில் அனுமதித்த போதிலும் இளைஞன் ஏற்கனவே உயிர் இழந்து விட்டதாக வைத்தியர்கள் தெரிவித்துள்ளனர்.
இதேவேளை சாரதிக்கு நித்திரை கலக்கம் ஏற்பட்டதால் இந்த விபத்து இடம்பெற்றிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.