-பதளை நிருபர்-
பதுளை – பசறை பலா கொல்ல பகுதியில் கடந்த இரண்டு நாட்களுக்கு முன் காணாமல் போனதாக கூறப்படும் நபர் நேற்று சனிக்கிழமை மாலை சடலமாக மீட்கப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.
பசறை பலா கொல்ல நெல்தண்டே பகுதியை சேர்ந்த 45 வயதுடையவரே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
உயிரிழந்த நபர் கடந்த 18 ஆம் திகதி குறித்த பகுதியில் இடம்பெற்ற புத்தாண்டு விருந்துபசாரத்தில் கலந்து கொண்டதன் பின்னர் தான் பசறை நகருக்கு சென்று வருவதாக கூறிவிட்டு சென்றுள்ளார்.
இதன்போது சென்ற நபர் வீடு திரும்பாததால் உறவினர்கள் அயலவர்களின் உதவியுடன் தேடுதலை மேற்கொண்டனர்.
இந்நிலையில் நேற்று சனிக்கிழமை மாலை குறித்த பகுதியில் அமைந்துள்ள சிறிய ஆற்றில் வீழ்ந்து உயிரிழந்த நிலையில் குறித்த நபர் சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
இதன்போது இறந்தவரின் மைத்துனர் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சென்று மேற்குறிப்பிட்ட நபர் தனது மூத்த அக்காவின் கணவர் என்றும் பசறை நகருக்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற நபர் சடலமாக கிடப்பதாக புகாரளித்துள்ளார்.
இதன்போது சம்பவ இடத்திற்கு விரைந்த பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன் சம்பவம் தொடர்பில் நீதிவான் நீதிமன்றத்தில் அறிக்கை சமர்ப்பித்துள்ளதாகவும் நீதிவான் பார்வையிட்டதன் பின்னர் சடலம் உடற்கூற்று பரிசோதனைகளுக்காக பதுளை வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட உள்ளதாகவும் குறித்த நபர் இறந்தமைக்கான காரணம் இதுவரையில் கண்டறியப்படவில்லை எனவும் பொலிஸார் மேலும் தெரிவித்தனர்.
மேலதிக விசாரணைகளை பசறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
Beta feature
