-பாறுக் ஷிஹான்-
கொரியர் சேவை ஊடாக சூட்சுமமாக கரடி பொம்மையில் ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் கைதாகிய காரைதீவு பிரதேச சபையின் முன்னாள் உறுப்பினரை எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதிவான் நீதிமன்று உத்தரவிட்டுள்ளது.
கடந்த புதன்கிழமை மாலை அம்பாறை மாவட்டம் கல்முனை தலைமையக பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புறநகர் பகுதியில் இடம்பெற்ற சோதனை நடவடிக்கையின் போது குறித்த சந்தேக நபர் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட்டிருந்தார்.
அத்துடன் கைதான சந்தேக நபர் அன்றைய தினம் சட்ட நடவடிக்கைக்காக நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்ட போது 120 மணித்தியாலங்கள் தடுத்து வைத்து விசாரணை மேற்கொள்ளுமாறும் ஏப்ரல் 13 ஆம் திகதி மன்றில் மீண்டும் ஆஜர்படுத்துமாறும் நீதிவான் உத்தரவு பிறப்பித்திருந்தார்.
ஏப்ரல் 13 ஆம் திகதி மன்றில் ஆஜர்படுத்தப்பட்ட குறித்த சந்தேக நபரை 7 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு உத்தரவு பிறப்பித்த நீதிவான் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி வரை வழக்கினை ஒத்தி வைத்தார்.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரின் நேரடி கண்காணிப்பில் இயங்கும் அம்பாறை மாவட்ட குற்றப் புலனாய்வு பிரிவு ( D.C.D.B ) பொலிஸ் பரிசோதகர் ஆர்.ஏ.டி.எஸ்.ரத்னாயக்கவிற்கு கிடைக்கப்பெற்ற தகவல் ஒன்றிற்கமைய மேற்குறித்த சோதனை நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டு ஐஸ் போதைப்பொருள் கடத்தலில் ஈடுபட்டதான குற்றச்சாட்டின் அடிப்படையில் சந்தேக நபர் கைதாகி இருந்தார்.
கொரியர் சேவை ஊடாக கடத்தி வரப்பட்டிருந்த விளையாட்டுப் பொருட்களுடன் இருந்த கரடி பொம்மையின் கழுத்துப் பகுதியில் சூட்சுமமாக மறைத்து வைத்திருந்த 107 கிராம் ஐஸ் போதைப்பொருளும் சந்தேக நபர் வசம் இருந்து மீட்கப்பட்டிருந்தது.
அத்துடன் இலத்திரனியல் தராசு , 2 கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், கொரியர் ஊடாக கடத்தி வரப்பட்ட ஐஸ் போதைப்பொருள் உள்ளிட்ட சான்றுப் பொருட்கள் சந்தேக நபர் வசம் இரந்த மீட்கப்பட்டிருந்ததாக எமது செய்தியாளர் தெரிவித்தார்.
மேலும் குறித்த சோதனை நடவடிக்கையானது கிழக்குப் பிரிவுக்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் பணிப்பரைக்கமைய அம்பாறை மாவட்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் உத்தரவிற்கமைய அம்பாறை மாவட்ட சிரேஸ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரி ஆராய்ச்சி வழிநடத்திலில் அம்பாறை மாவட்ட உதவி பொலிஸ் அத்தியட்சகர் சம்பத் விக்ரமரத்னவின் மேற்பார்வையில் அம்பாறை மாவட்ட ஊழல் தடுப்புப் பிரிவின் பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் கே.ஏ.எம்.பிரியங்கர தலைமையிலான குழுவினரால் இந்த சோதனை மேற்கொள்ளப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
