காலிமுகத்திடலில் கையில் சிங்கக்கொடியுடன் கூட்டமைப்பு சுதந்திர தினம் கொண்டாடியபோது கட்சியில் சுமந்திரனும், சிறிதரனும் இல்லையா?, என மட்டக்களப்பு தமிழ் உணர்வாளர் அமைப்பின் தலைவர் கணபதிப்பிள்ளை மோகன் கேள்வி எழுப்பியுள்ளார்.
நேற்று ஞாயிற்றுக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்ற கரிநாள் அனுஸ்டிப்பு மற்றும் தமிழரசுக்கட்சியின் செயற்பாடுகள் தொடர்பில் அவர் தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
அன்று கம்பரெலிய கமிசனுக்காகவும் அபிவிருத்தி குழு தலைமைக்காகவும் அறிவிக்கப்படாத அமைச்சர்களாக அனைத்து சலுகைகளும் கிடைத்தபோது கரிநாளாக தெரியவில்லை இன்று தான் கரிநாளாக தெரிகிறதா?
அன்றுதொடக்கம் இன்றுவரை சுதந்திர தினத்தை புறக்கணித்துவரும் பல்கலைக்கழக மாணவர்களுக்கு இந்த நாளை கரிநாள் என்று கூறும் உரிமை உண்டு சாணக்கியன் போன்ற சீசன் நடிகர்களுக்கு அந்த யோக்கியதை கிடையாது.
மைத்திரி ரணில் கூட்டாட்சிக்கு நல்லாட்சி அரசாங்கமென்று பெயரை வைத்து நாலு வருடங்கள் சுகபோகம் அனுபவிக்கும் போதும் இதே போன்று தெருவில் இறங்கி போராடினார்கள் இளைஞர்கள் அவர்களுக்கு நீங்கள் வைத்த பெயர் என்ன? குழப்பவாதிகள், தெற்கின் இனவாதிகளுக்கு தீனிபோடுகிறவர்கள், மகிந்தவை மீண்டும் ஆட்சிக்கு கொண்டுவர மறைமுகமாக உதவுகிறார்கள் என அவர்களை இழித்துப்பேசினீர்கள் ரணில் அரசாங்கத்துடனான தேனிலவு முடிந்து கமிசன்கள் கைமாறுவது நின்றவுடன் உங்களுக்கு கரிநாளாக தெரிகிறதா?
இல்லை தெரியாமல்தான் கேட்கிறேன், கம்பரெலியா காலத்தில் தமிழ் மக்களுக்கு சுதந்திரம் கிடைத்திருந்ததா? அதனால்தான் அன்று இவ்வாறு கரிநாள் அறிவிப்பு விடுத்து போராடாமல் ரணிலுக்கு மாலை மரியாதை அணிவித்து ஊர் ஊராய் கூட்டித்திருந்தீர்கள்? கட்சி அலுவலகத்தில் விருந்துபசாரம் செய்தீர்கள்? அவ்வளவு ஈனத்தனங்களையும் செய்துவிட்டு இன்று வெட்கமேயின்றி மக்கள் முன்வந்து நாடகம் ஆடுகின்றீர்கள். மட்டக்களப்பு மக்கள் என்ன மடையர்களா?
எம் இனம் மீது அடிமைத்தனம் திணிக்கப்பட்டுள்ளது. அதனை ஏற்கிறேன் ஆனால்அதனை எதிர்க்க உங்களுக்கு அந்த ஜோக்கியதை கிடையாது. சுதந்திரத்தின் அடையாளமான சிங்கக் கொடியை சாட்சியாக வைத்து ஒருமித்த இலங்கைக்குள் இலங்கையின் இறையாண்மைக்கு கட்டுப்படுவேன் என்று பாராளுமன்றில்சத்தியப் பிரமாணம் செய்து விட்டு அரச சம்பளம், அரசவாகனம், அரசவளங்கள் என்று ஆடம்பரம் அனுபவிக்கும் உங்களைப் பார்த்து என்ன சொல்வது?
உங்களால் அபிவிருத்தி முடியாது, பதவி உயர்வு வாங்கி தர முடியாது, இடம் மாற்றம் வாங்கிதர முடியாது சாதாரண அடிமட்ட மக்களுக்கு கொடுக்கப்படும் பிச்சைசம்பளம் கூட பெற்றுக்கொடுக்க முடியாத நீங்கள் உங்கள் மக்களுக்கு செய்த சேவை என்ன? நீங்கள் போராடி பெற்றது என்ன? இதுவரை எதனை சாதித்தீர்கள் ?எத்தனை காலத்துக்கு இந்த ஏமாற்றுவித்தை ? ஏமாறுபவன் இருக்கும் வரை ஏமாற்றுபவர்கள் வாழ்வார்கள், இது எனது ஆதங்கம், என தெரிவித்துள்ளார்.