மட்டக்களப்பு கரடியனாறு பொலிஸ் பிரிவில் சந்தேகத்திற்கிடமான முறையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை சோதனை செய்ய முயன்ற பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்ததாகக் குற்றம் சாட்டப்பட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.
இந்தச் சம்பவம் நேற்று ஞாயிற்றுக்கிழமை இரவு 7.00 மணியளவில் கரடியனாறு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தளவாய் பகுதியில் இடம்பெற்றுள்ளது.
சிவில் உடையில் மோட்டார் சைக்கிளில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த இரு பொலிஸ் உத்தியோகத்தர்கள், வயல் பகுதியை அண்மித்த வீதியோரத்தில் சந்தேகத்திற்கிடமான வகையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை அவதானித்து அதனை பரிசோதனை செய்ய முற்பட்டுள்ளனர்.
இதன்போது, மோட்டார் சைக்கிளின் உரிமையாளர் அங்கிருந்து சென்றதாகவும், அங்கு கூடியிருந்த சில பொதுமக்களுக்கும் பொலிசாருக்கும் இடையே வாய்த்தர்க்கம் ஏற்பட்டதாகவும் தெரிவிக்கப்படுகிறது. இந்த நிலைமை தொடர்பில் சம்பவ இடத்தில் இருந்த பொலிசார் மேலதிகாரிகளுக்கு அறிவித்துள்ளனர்.
அதனைத் தொடர்ந்து, கரடியனாறு பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி கே.எம்.டி.எஸ். திசாநாயக்க தலைமையில் மேலதிக பொலிஸ் குழுவொன்று சம்பவ இடத்துக்குச் சென்று, பொலிசாரின் கடமைக்கு இடையூறு விளைவித்த குற்றச்சாட்டின் பேரில் பங்குடாவெளி பகுதியைச் சேர்ந்த 55, 31 மற்றும் 25 வயதுடைய மூவரை கைது செய்துள்ளது.
கைது செய்யப்பட்ட சந்தேகநபர்களை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாக கரடியனாறு பொலிசார் தெரிவித்தனர்.