-அம்பாறை நிருபர்-
அம்பாறை மாவட்டம் கல்முனை பிராந்திய கடல் பகுதியில் நேற்று செவ்வாய்க்கிழமை காலை இயந்திரம் உட்பட வலைகளுடன் கடலில் நங்கூரத்தில் இணைக்கப்பட்டு தரித்திருந்த பாரிய படகு கடலில் மூழ்கியது.
இவ்வாறு மூழ்கிய படகு 65 லட்சத்துக்கும் அதிக பெறுமதியுடையதுடன் இப்படகு கல்முனை பகுதியை சேர்ந்த மீனவர் ஒருவருடையது என இனங்காணப்பட்டுள்ளது.
தொடர்ந்து கடற்கரைப்பகுதில் இருந்து 500 மீற்றர் தொலைவில் மூழ்கியுள்ள குறித்த படகினை மீட்பதற்கான மற்றுமொரு முயற்சியாக இலங்கை கடற்படையினரின் உதவியும் கோரப்பட்ட போதிலும் அவர்களின் உதவி கைகூடவில்லை.
இருப்பினும் நோன்புடன் கல்முனை ஆழ்கடல் சுழியோடி அணியினர் மிகுந்த சிரமத்திற்கு மத்தியில் படகினை மீட்டு கடற்கரை பகுதிக்கு நேற்று மாலை இழுத்து வந்தனர்.
மேலும் குறித்த படகில் பல இலட்சம் பெறுமதியான இயந்திரம் வலைகள் உட்பட பல உபகரணங்கள் இருந்த நிலையில் அவை சேதமடைந்துள்ளமை குறிப்பிடத்தக்கது.