மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சமூக ஊடகங்களில் கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் வழக்கு தொடர்பில், நீதிமன்றத்தில் ஆஜராகத் தவறிய ராஜாங்கனை சத்தாரதன தேரரைக் கைது செய்யுமாறு கொழும்பு கோட்டை நீதவான் நீதிமன்றம் இன்று புதன்கிழமை பிடியாணை பிறப்பித்துள்ளது.
அத்துடன், அவருக்கு பிணை வழங்கிய பிணையாளர்களுக்கும் அறிவித்தல் அனுப்புமாறு கொழும்பு கோட்டை நீதவான் பசன் அமரசேன உத்தரவிட்டுள்ளார்.
குற்றப் புலனாய்வுத் திணைக்களம் (CID) முன்வைத்த சமர்ப்பணங்களைத் தொடர்ந்து நீதிமன்றம் இந்த உத்தரவுகளைப் பிறப்பித்துள்ளது.
மேலும், அரசாங்கப் பகுப்பாய்வாளரின் அறிக்கைகளைச் சமர்ப்பிப்பதற்காக குறித்த வழக்கை 2027ஆம் ஆண்டு பெப்ரவரி 24ஆம் திகதி மீண்டும் விசாரணைக்கு எடுத்துக்கொள்ளுமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
பௌத்த துறவற நிலையிலிருந்து நீக்கப்பட்ட ராஜாங்கனை சத்தாரதன தேரர், மத நல்லிணக்கத்திற்குப் பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் சர்ச்சைக்குரிய கருத்துகளை வெளியிட்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் முன்னதாக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்டு, பின்னர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தார்.
எனினும், அநுராதபுரம் புனித நகரப் பகுதியில் ஏற்பட்ட பதற்றமான சூழ்நிலை தொடர்பான மற்றுமொரு வழக்கில் அவர் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளார்.










