“அவர்கள் என்னைக் காப்பாற்றவில்லை என்றால் அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை, அதனால்தான் நான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன், என புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் அலி சப்ரி ரஹீம் தெரிவித்தார்.
பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழுவின் தலைவர் ஜனக ரத்நாயக்கவை பதவி நீக்கம் செய்யும் பிரேரணைக்கு எதிராக வாக்களித்தமை தொடர்பில் நாடாளுமன்ற வளாகத்தில் ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விக்கு பதிலளிக்கும் போதே அலி சப்ரி ரஹீம் இதனை தெரிவித்தார்.
அலி சப்ரி ரஹீம் சட்டவிரோதமாக இலங்கைக்கு சுமார் மூன்றரை கிலோ தங்கத்தை கொண்டு வந்த போது சுங்கத்துறையினரால் கைது செய்யப்பட்டு அது தொடர்பான அபராதத்தை செலுத்தி நாடாளுமன்றத்திற்கு வந்தார்.
அதன்போது ஊடகவியலாளர்கள் கேட்ட கேள்விகளுக்கு பதிலளித்த அலி சப்ரி ரஹீம் மேலும் தெரிவிக்கையில்,
ஜனக ரத்நாயக்க எனக்கு எதிராக எதனையும் செய்யவில்லை.
இது என் தவறல்ல, எனது உதவியாளர் ஒருவரே தங்கத்தை கொண்டுவந்தார், ஆனால் நானே குற்றவாளி எனக் காட்டப்பட்டது.
இதை நான் ஜனாதிபதி செயலாளரிடம் கூறினேன், பிரதமரிடம் கூறினேன், எவரும் உதவிக்கு வரவில்லை எனக்கு அநீதி இழைக்கப்பட்டது.
எந்த தவறும் செய்யாமல் 75 லட்சம் அபராதம் செலுத்தி வெளியே வந்தேன், எனது உதவியாளர் ஒருவரே இந்த பையை பொதிசெய்து எனது பையில் வைத்தார், அவரது தவறுக்காக இறுதியில் நான் மாட்டிக்கொண்டேன்.
எனக்கு இதுபோன்ற அநீதி நடந்திருக்கும் போது நான் ஏன் அரசாங்கத்துடன் இருக்க வேண்டும்? இதுபோன்ற நேரத்தில் அவர்கள் என்னைக் காப்பாற்றவில்லை என்றால், அரசாங்கத்துடன் இருப்பதில் அர்த்தமில்லை, அதனால்தான் நான் அரசாங்கத்துக்கு எதிராக வாக்களித்தேன் என தெரிவித்தார்.