தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் வெளியிட்டு வந்த ஊழல்கள் தொடர்பான விசாரணைகளை முன்னெடுத்து, சட்ட நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன வலியுறுத்தியுள்ளது.
அந்தக் கட்சியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் இதனைத் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி கடந்த காலங்களில் எதிர்க்கட்சியாக இருந்த போது, பாரிய எண்ணிக்கையிலான கோப்புகளைக் காண்பித்து, அவை அனைத்தும் அரசாங்கத்தில் உள்ளவர்கள் மேற்கொண்ட ஊழல்கள் குறித்த விபரங்கள் என்று தெரிவித்தது.
அந்த கோப்புகள் உண்மையாக இருந்தால், தற்போது அதிகாரம் பெற்றுள்ள தேசிய மக்கள் சக்தி அந்த கோப்புகள் குறித்து விசாரணைகளை மேற்கொண்டு சம்மந்தப்பட்ட தரப்பினருக்கு எதிராகச சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும்.
ராஜபக்சவினருக்கு எதிரான பெரும் ஊழல் குற்றச்சாட்டுகள் முன்வைக்கப்பட்டன.
இலங்கையிலிருந்து 18 பில்லியன் டொலர்கள் உகண்டாவுக்கு கொண்டு செல்லப்பட்டதாகக் குற்றம் சுமத்தப்பட்டது.
அந்தக் குற்றச்சாட்டு உண்மையாக இருந்தால், இப்போது ஜனாதிபதியாகி இருக்கின்ற அனுரகுமார திஸாநாயக்க அவற்றுக்கு எதிராக விசாரணைகளை முன்னெடுத்து குற்றவாளிகளை சட்டத்தின் முன் நிறுத்தி தண்டனை கொடுக்க வேண்டும்.
ஆனால் அவ்வாறு செய்யாமல், தேசிய மக்கள் சக்தியைச் சேர்ந்தவர்கள் இப்போதும் முன்னறை போலவே ஊழல்கள் செய்ததாகக் கூறப்படும் நபர்கள் தொடர்பாக ஊடகங்கள் முன்னால் வந்து குற்றச்சாட்டுகளை அடுக்குகின்றனர்.
ஆட்சி அதிகாரம் தங்களிடம் இருக்கும் போதும் அவர்கள் இவ்வாறு குற்றச்சாட்டுகளை மட்டும் முன்வைத்து வருவது ஊடகங்கள் ஊடாக மக்கள் மத்தியில் பிரபல்யம் பெற்று எதிர்வரும் பொதுத் தேர்தலில் அதனைப் பயன்படுத்திக் கொள்வதற்காகக்தான்.
அவ்வாறு செய்வது நாட்டுக்கு இழைக்கப்படும் அநீதியாகும் என்று ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் செயலாளர் சாகர காரியவசம் குறிப்பிட்டுள்ளார்.