படுகொலை செய்யப்பட்ட ஊடகவியலாளர் சுப்பிரமணியம் சுகிர்தராஜனின் 19 ஆவது ஆண்டு நினைவு நாளை முன்னிட்டு வெள்ளிக்கிழமை நீதி கோரி ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது.
திருகோணமலை உவர்மலை லோவர் வீதியில் உள்ள உவர்மலை பூங்காவில் பிற்பகல் 2.30 மணியளவில் சுகிர்தராஜனின் உருவப்படத்துக்கு மலர்மாலை அணிவிக்கப்பட்டு சுடரேற்றி, மலர்தூவி அஞ்சலி செலுத்தப்பட்டதுடன் மூவின ஊடகவியலாளர்களும் குறித்த நிகழ்வில் கலந்துகொண்டு கிழக்கு மாகாண ஆளுநர் செயலகம் வரை பேரணியாக சென்று கவனயீர்ப்பில் ஈடுபட்டனர்.
கிழக்கு மாகாண ஊடகவியலாளர் ஒன்றியம், திருகோணமலை ஊடகவியலாளர் ஒன்றியம் மற்றும் இலங்கை தொழில்சார் இணைய ஊடகவியலாளர் ஒன்றியம் ஆகியவற்றின் ஏற்பாட்டிலும், அகம் மனிதாபிமான வள நிலையத்தின் ஒத்துழைப்புடனும் இடம்பெற்ற குறித்த நிகழ்வில் வடக்கு கிழக்கு மாகாணங்களிலுள்ள ஊடகவியலாளர்கள், சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் என பலரும் இதன் போது கலந்து கொண்டனர்.
திருகோணமலை துறைமுகத்தில் கடமையாற்றி வந்த சுகிர்தராஜன் தனது தொழில் நிமிர்த்தமாக திருமலையில் தங்கியிருந்ததோடு ஊடகவியலாளராகவும் பணியாற்றி வந்தார். வீரகேசரி பத்திரிகையில் எஸ்.எஸ்.ஆர், மனோ, ரஹ்மான் ஆகிய பெயர்களிலும் மெற்ரோ நியூஸ் பத்திரிகையில் ஈழவன் என்ற பெயரிலும் சுடர் ஒளி, உதயன் பத்திரிகைகளிலும் அரசியல் விடயங்களை எழுதி வந்தார்.
இந்நிலையில் 24.01.2006 அன்று காலையில் வேலைக்கு செல்வதற்கு பேரூந்துக்காக காத்திருக்கும் போது ஆளுநர் செயலகத்திற்கு முன்னால் உள்ள வீதியில் வைத்து துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானார்.
2006 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 2ஆம் திகதி திருகோணமலை கடற்கரையில் வைத்து, பல்கலைக்கழகத்திற்கு தெரிவாகியிருந்த ஐந்து மாணவர்கள் படுகொலை செய்யப்பட்ட சம்பவத்தை உலகிற்கு வெளிச்சம்போட்டுக் காட்டியிருந்தார்.
இதன் காரணமாக அவர் குறிவைக்கப்பட்டிருந்தார். குறிப்பாக குறித்த ஐந்து மாணவர்களின் இறப்புக்கு கைக்குண்டு தாக்குதலே காரணம் எனக் கூறி விசாரணையை திசைதிருப்ப முயற்சி செய்த நேரத்தில் ஊடகவியலாளர் சுகிர்தராஜன் மிகவும் துணிச்சலுடன் செயற்பட்டு சுட்டுகொல்லப்பட்ட மாணவர்களின் சூட்டுக் காயங்களை நுட்பமாக படமெடுத்து குறித்த மாணவர்கள் தலையில் துப்பாக்கியால் சுடப்பட்டே இறந்துள்ளனர். அவர்களின் தலையில் உள்ள காயங்கள் கைக்குண்டு தாக்குதலால் ஏற்பட்டவை அல்ல அது துப்பாக்கி குண்டுகளால் ஏற்படுத்தப்பட்டவை என்பதை உலகிற்கு வெளிக்காட்டியிருந்தார்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்


