சிறுநீரக நோயாளிகளுக்கான சிகிச்சை மருந்துகள் மற்றும் உயிருக்கு ஆபத்தான தொற்றுகளுக்குப் பயன்படுத்தப்படும் மருந்துகளை கொள்வனவு செய்வதற்காக இரண்டு கொள்வனவு ஒப்பந்தங்களுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானங்களின்படி, தீவிர அல்லது நாள்பட்ட சிறுநீரக செயலிழப்பால் பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு டயாலிசிஸ் சிகிச்சையில் பயன்படுத்தப்படும் 11 இலட்சம் மருந்துப் பொதிகளைக் கொள்வனவு செய்வதற்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
டயாலிசிஸ் சிகிச்சைக்கு உட்படுத்தப்படும் நோயாளிகளின் உடலில் உள்ள கழிவுப் பொருட்கள் மற்றும் அதிகப்படியான திரவங்களை அகற்றுவதற்கு இந்த மருந்து பயன்படுத்தப்படுகிறது.
சர்வதேச போட்டி கொள்வனவு நடைமுறையின் கீழ் இந்த கொள்வனவுக்காக இரண்டு விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
விலைமனுக்கள் மதிப்பீடு செய்யப்பட்டு, உயர்மட்ட கொள்வனவு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரால் முன்வைக்கப்பட்ட யோசனைக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி, 990 மில்லியன் ரூபா பெறுமதியான ஒப்பந்தம் இலங்கையின் Infuxion Lanka (Private) Limited நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.
இந்த மருந்து மலேசியாவின் Peritone Health SDN BHD நிறுவனத்தினால் தயாரிக்கப்படவுள்ளது.
இதற்கிடையில், உயிருக்கு ஆபத்தான தொற்றுகளான கிரிப்டோகொக்கல் மூளைக்காய்ச்சல் மற்றும் உள்ளுறுப்பு லீஷ்மேனியாசிஸ் உள்ளிட்ட நோய்களுக்கு சிகிச்சையளிக்கப் பயன்படுத்தப்படும் 50 மில்லிகிராம் அளவுடைய 54,000 Liposomal Amphotericin B மருந்துக் குப்பிகளை கொள்வனவு செய்வதற்கும் அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இந்த கொள்வனவுக்காக சர்வதேச போட்டி கொள்வனவு நடைமுறையின் கீழ் மூன்று விலைமனுக்கள் கிடைக்கப்பெற்றன.
உயர்மட்ட நிலையான கொள்வனவு குழுவின் பரிந்துரையின் அடிப்படையில், இந்தியாவின் Gufic Biosciences Ltd நிறுவனத்திற்கு இந்த ஒப்பந்தம் வழங்கப்பட்டுள்ளது. குறித்த மருந்தை அந்த நிறுவனமே தயாரிக்கவுள்ளது.
விமானப் போக்குவரத்து மூலம் மருந்துகளை கொண்டு வருவதற்கான செலவு மற்றும் சரக்கு போக்குவரத்துக் கட்டணங்கள் உட்பட இந்த ஒப்பந்தத்தின் பெறுமதி 702,000 அமெரிக்க டொலர்களாகும்.
சுகாதார மற்றும் ஊடகத்துறை அமைச்சரின் முன்மொழிவுகளின் அடிப்படையில், இரண்டு கொள்வனவு ஒப்பந்தங்களும் குறைந்த விலையில் முன்வைக்கப்பட்ட, நிபந்தனைகளைப் பூர்த்தி செய்த விலைமனுதாரர்களுக்கு வழங்கப்பட்டுள்ளன.










