இலங்கைக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் (EU) இடையிலான நிலையான வர்த்தக உறவுகளை மேம்படுத்தும் திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்காக, ஐரோப்பிய ஒன்றியத்திடமிருந்து 10 மில்லியன் யூரோ நிதியுதவியைப் பெற்றுக்கொள்ள அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
அமைச்சரவைத் தீர்மானத்தின்படி, பசுமை மாற்ற முயற்சிகள் மற்றும் காலநிலை மாற்றத்தைத் தாங்கக்கூடிய வர்த்தக நடைமுறைகளை ஊக்குவிப்பதன் மூலம் இரு தரப்புக்கும் இடையிலான நிலையான வர்த்தக உறவுகளை வலுப்படுத்தும் நோக்கில் இந்தத் திட்டத்திற்கு ஐரோப்பிய ஒன்றியம் ஆதரவளிக்க இணங்கியுள்ளது.
மேலும், வர்த்தகத்துடன் தொடர்புடைய நிறுவனங்களின் செயற்பாட்டுத் திறனை மேம்படுத்துவதுடன், ஐரோப்பிய ஒன்றியச் சந்தையை அணுகுவதற்குத் தேவையான சர்வதேச தரநிலைகளைப் பூர்த்தி செய்வதற்கு இலங்கைக்கு ஆதரவளிப்பதும் இத்திட்டத்தின் நோக்கங்களாகும்.
வர்த்தகம், வணிகம், உணவுப் பாதுகாப்பு மற்றும் கூட்டுறவு அபிவிருத்தி அமைச்சின் ஊடாக நான்கு வருட காலப்பகுதியில் இத்திட்டம் நடைமுறைப்படுத்தப்படவுள்ளது.
இதற்கமைய, நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சரான ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சமர்ப்பித்த முன்மொழிவுக்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது.
இலங்கை அரசாங்கத்துக்கும் ஐரோப்பிய ஒன்றியத்துக்கும் இடையில் நிதியுதவி ஒப்பந்தத்தில் கைச்சாத்திட்டு, குறித்த 10 மில்லியன் யூரோ நிதியுதவியைப் பெற்றுக்கொள்வதற்கே இந்த அனுமதி வழங்கப்பட்டுள்ளது.










