-பதுளை நிருபர்-
ஹப்புத்தளை விகாரகலை பகுதியில் விடுதி ஒன்றில் தங்கி இருந்து, உடற்பயிற்சிக்காக வெளியே சென்றிருந்த 63 வயதுடைய ஜேர்மன் நாட்டு பிரஜை மீண்டும் இன்று வியாழக்கிழமை அதிகாலை விடுதிக்கு வந்துள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
ஹப்புத்தளை விகாரகலை பகுதியில் தனது மனைவியுடன் விடுதி ஒன்றில் தங்கி இருந்த மேற்குறிப்பிட்ட வெளிநாட்டு பிரஜை, உடற்பயிற்சிக்காக நேற்று புதன்கிழமை பிற்பகல் வெளியே சென்று விடுதிக்கு திரும்பவில்லை, என ஹப்புத்தளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு அளிக்கப்பட்டுள்ளதாக ஹப்புத்தளை பொலிஸார் தெரிவித்தனர்.
பின்னர் ஹப்புத்தளை பொலிஸாரும், இராணுவத்தினரும் இணைந்து நேற்று இரவு சுமார் 12.00 மணிவரை தேடுதலை மேற்கொண்ட போது குறித்த வெளிநாட்டு பிரஜை தொடர்பில் எதுவித தகவல்களும் கிடைக்கப் பெறவில்லை.
இந்நிலையில் அதிகாலை மீண்டும் தேடுதலை மேற்கொள்ள இருந்த நிலையிலேயே இன்று அதிகாலை அவர் விடுதிக்கு வந்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
குறித்த வெளிநாட்டு பிரஜையிடம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்ட போது, உடற்பயிற்சிக்காக வெளியே சென்றபோது வழி தவறி சென்றதாக அவர் தெரிவித்துள்ளார்.
மேலதிக விசாரணைகளை ஹப்புத்தளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.