இலங்கை பணிப்பெண் ஒருவர் மலேசியாவில் பணியாற்றி வந்த நிலையில் அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றின் இரண்டாவது மாடியில் இருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளார்.
குருநாகல் – கொபேகனே அரலுகஸ்வெவ பகுதியை சேர்ந்த 42 வயதுடைய பெண்ணொருவரே இவ்வாறு உயிரிழந்துள்ளார்.
கடந்த வருடம் டிசம்பர் 18ஆம் திகதி மாலபேயில் வசிக்கும் தனது நண்பர் ஒருவரின் ஊடாக சுற்றுலா விசாவில் இப்பெண் வெளிநாட்டுக்கு சென்றுள்ளதாக குடும்பத்தினர் தெரிவிக்கின்றனர்.
கடந்த 23ஆம் திகதி வீட்டில் வேலை செய்ய முடியாத நிலையில் உள்ளதாகவும் வேறு இடத்தில் தற்போது பணியில் இணைந்துள்ளதாகவும் கணவரிடம் அப்பெண் தொலைபேசியில் தெரிவித்துள்ளார்.
இந்நிலையில் நேற்று புதன்கிழமை இரவு அவர் அடுக்குமாடி குடியிருப்பொன்றின் இரண்டாவது மாடியின் ஜன்னலிலிருந்து தவறி விழுந்து உயிரிழந்துள்ளதாக வீட்டாருக்கு அறிவிக்கப்பட்டுள்ளது.
எனினும் அவரது மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது கணவர் தெரிவித்துள்ளார்.