நாரஹேன்பிட்டி கலால் நிலையத்தில் பணியாற்றிய கலால் திணைக்கள அதிகாரி ஒருவருக்கு, இலஞ்சம் தொடர்பான ஆறு குற்றச்சாட்டுகளிலும் தலா ஐந்து ஆண்டுகள் வீதம் 30 ஆண்டுகள் கடூழியச் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளதாக இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை விசாரிக்கும் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
அதிகாரிக்கு எதிரான வழக்கில், கடந்த 2026 ஒக்டோபர் 28ஆம் திகதி கொழும்பு மேல் நீதிமன்றம் இந்தத் தீர்ப்பை வழங்கியுள்ளது. இலஞ்சச் சட்டத்தின் கீழ் சுமத்தப்பட்ட ஆறு குற்றச்சாட்டுகளிலும் அவர் குற்றவாளியாகக் காணப்பட்டதைத் தொடர்ந்து, மேல் நீதிமன்ற நீதிபதி இந்தத் தண்டனையை விதித்துள்ளார்.
ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் தலா ஐந்து ஆண்டுகள் வீதம் மொத்தமாக 30 ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ள போதிலும், இந்தத் தண்டனைகள் ஒரே நேரத்தில் அனுபவிக்கப்பட வேண்டுமா அல்லது ஒன்றன்பின் ஒன்றாக அனுபவிக்கப்பட வேண்டுமா என்பது தொடர்பில் இலஞ்ச ஆணைக்குழு தெளிவுபடுத்தவில்லை.
போதைப்பொருள் மாத்திரைகள் தொடர்பான குற்றச்சாட்டில் பெண்ணொருவரின் கணவர் கைது செய்யப்பட்டிருந்த நிலையில், அவருக்கு எதிராகக் குறைந்த தண்டனைக்குரிய குற்றச்சாட்டைப் பதிவு செய்வதாகக் கூறி, குறித்த அதிகாரி அந்தப் பெண்ணிடம் 60 இலட்சம் ரூபாவைக் கோரியதாக இலஞ்ச ஆணைக்குழு தெரிவித்துள்ளது.
இதன்போது, முறைப்பாட்டாளரிடமிருந்து 29 இலட்சம் ரூபாவைப் பெற்றுக்கொண்ட குறித்த அதிகாரி, பின்னர் மேலும் 10 இலட்சம் ரூபாவைக் கோரியுள்ளதாகவும் ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.
இதற்கு மேலதிகமாக, ஆறு குற்றச்சாட்டுகளுக்கும் சேர்த்து 30,000 ரூபா அபராதத்தையும் நீதிமன்றம் விதித்துள்ளது.
அத்துடன், இலஞ்சச் சட்டத்தின் கீழ் 29 இலட்சத்து 20 ஆயிரம் ரூபா மற்றும் 10 இலட்சம் ரூபா ஆகிய தொகைகளைத் தண்டப்பணமாகச் செலுத்துமாறும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. குறித்த தொகைகளைச் செலுத்தத் தவறினால் மேலதிக சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டியிருக்கும் எனவும் உத்தரவிடப்பட்டுள்ளது.










