-மன்னார் நிருபர்-
ராமேஸ்வரம் மீன்பிடி துறைமுகத்தில் இருந்து மீன்பிடிக்கச் சென்ற இரண்டு விசைப்படகுகளையும் அதிலிருந்த 9 மீனவர்களையும் எல்லை தாண்டி மீன்பிடித்ததாக இலங்கை கடற்படை கைது செய்து காங்கேசன்துறை கடற்படை முகாமிற்கு அழைத்துச் சென்றுள்ளனர்.
மேலும் நடுக்கடலில் மீன் பிடித்து கொண்டிருந்த மீன்பிடி விசைப் படகு மீது இலங்கை கடற்படை ரோந்து கப்பல் மோதியதில் படகின் பின் பகுதி சேதம் அடைந்து படகில் இருந்த மீனவர்கள் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பி கரை சேர்ந்துள்ளனர்.
மீனவர்கள் இன்று செவ்வாய் கிழமை அதிகாலை 2 மணியளவில் இலங்கை இந்திய சர்வதேச கடல் எல்லைக்கும் நெடுந்தீவுக்கும் இடையே மீன்பிடித்துக் கொண்டிருக்கும் போது அப்பகுதியில் ரோந்து பணி ஈடுபட்டு கொண்டிருந்த இலங்கை கடற்படையினர் ராமேஸ்வரத்தைச் சேர்ந்த இரண்டு விசை படகையும் அதிலிருந்த 9 மீனவர்களை எல்லை தாண்டி மீன் பிடித்ததாக கைது செய்து காங்கேசன்துறை கடற்கரை முகாமுக்கு அழைத்துச் சென்று அங்கு அவர்களிடம் முதல் கட்ட விசாரணை நடத்தி பின் யாழ்ப்பாணம் மீன் வளத்துறை அதிகாரிகளிடம் மீனவர்கள் அனைவரும் ஒப்படைக்கப்பட்டனர்.
விசாரணைக்கு பின் மீனவர்கள் ஊர்காவற்துறை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்த உள்ளதாக மீன்வளத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்