இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட்ட மூன்று வேட்பாளர்களைத் தவிர, ஏனைய 35 வேட்பாளர்களும் தங்களது கட்டுப்பணத்தை இழந்துள்ளதாகத் தேர்தல்கள் ஆணைக்குழுவின் ஆணையாளர் நாயகம் சமன் ஸ்ரீ ரத்நாயக்க தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதியாகத் தெரிவான அனுரகுமார திஸாநாயக்க, இரண்டாம் இடத்தை பெற்ற சஜித் பிரேமதாச மற்றும் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ஆகியோருக்கு மாத்திரமே கட்டுப்பணத்தை மீண்டும் பெறுவதற்கான வாய்ப்பு ஏற்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
வரலாற்றில் அதிகளவான வேட்பாளர்கள் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை செலுத்தியிருந்தனர்.
இதற்கமைய 40 வேட்பாளர்கள் கட்டுப்பணம் செலுத்திய நிலையில், அவர்களில் 39 வேட்பாளர்கள் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தனர்.
ஜனாதிபதி வேட்பாளரான அஹிதுருஸ் மொஹமட் இல்யாஸின் திடீர் மரணம் காரணமாக இந்தமுறை ஜனாதிபதித் தேர்தலில் 38பேர் மாத்திரமே போட்டியிட்டனர்.
இதன்படி அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சி ஊடாக போட்டியிட்ட வேட்பாளர் ஒருவருக்கு 50,000 ரூபாவும், சுயேச்சை வேட்பாளர் ஒருவருக்கு 75,000 ரூபாவும் கட்டுப்பணமாக அறவிடப்பட்டிருந்தது.
இந்தநிலையில் தேர்தலில் போட்டியிட்ட முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸவின் மகனான நாமல் ராஜபக்ஸ, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, விஜயதாஸ ராஜபக்ஸ, திலித் சுசந்த ஜயவீர, சரத் மனமேந்திர, பிரியந்த புஸ்பகுமார விக்ரமசிங்க, கே.கே.பியதாஸ, சிறிபால அமரசிங்க, சரத் கீர்த்திரத்ன, லலித் டி சில்வா ஆகியோர் கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.
அத்துடன், தமிழ் பொது வேட்பாளர் பா.அரியநேத்திரன், மயில்வாகனம் திலகராஜ், அபுபக்கர் மொஹமட் இன்பாஸ், ஏ.எஸ்.பி.லியனகே, பானி விஜேசிறிவர்தன, அஜந்த டி சொய்சா, பத்தரமுல்லே சீலரத்ன தேரர், நுவன் சஞ்சீவ போபகே, கே.ஆனந்த குலரத்ன ஆகியோரும் ஜனாதிபதி தேர்தலுக்கான கட்டுப்பணத்தை இழந்துள்ளனர்.
அதேநேரம், ஓஷல லக்மால் அனில் ஹேரத், ஜனக்க பிரியந்த குமார ரத்நாயக்க, அக்மீமன தயாரத்ன தேரர், கே.ஆர்.கிஷான், பொல்கம்பொல ராலலாகே சமிந்த அநுருத்த, அநுர சிட்னி ஜயரத்ன, சிறிதுங்க ஜயசூரிய ஆகியோரும் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்துடன், மஹிந்த தேவகே, மொஹமட் இல்லியாஸ், லக்ஸ்மன் நாமல் ராஜபக்ஸ, அன்டனி விக்டர் பெரேரா, கீர்த்தி விக்ரமரத்ன, மரக்கலமானகே பிரேமசிறி, பி.டபிள்யூ.எஸ்.கே.பண்டாரநாயக்க, டி.எம்.பண்டாரநாயக்க, அகம்பொடி பிரசங்க சுரஞ்ஜீவ அனோஜ் டி சில்வா, அநுருத்த ரணசிங்க ஆராய்ச்சிகே ரொஷான் ஆகியோரும் 2024ஆம் ஆண்டுக்கான ஜனாதிபதித் தேர்தலில் கட்டுப்பணத்தை இழந்துள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.