வாய்க்காலில் தவறி விழுந்து 4 வயது சிறுமி மரணம்

-திருகோணமலை நிருபர்-

திருகோணமலை – தம்பலகாமம் முள்ளிப்பொத்தானை 10 ஆம் கொலனியில் வீடொன்றுக்கு முன்பாக வாய்க்காலில் ஓடிய தண்ணீரில் விழுந்து நேற்று முன்தின் வெள்ளிக்கிழமை சிறுமி ஒருவர் உயிரிழந்துள்ளார்.

ரிஹால் அமல் ஹாஜர் (வயது – 4) என்ற முன்பள்ளிச் சிறுமியே உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்,

தந்தை வீட்டின் முன்பாக வாகன பற்றரி மாற்றிக் கொண்டிருந்த போது, சிறுமி அருகில் இருந்துள்ளார். வேலை மும்முரத்தில் மகள் கூட அருகில் இருந்ததை தந்தை கவனிக்க தவறியுள்ளார்.

இந்த சமயத்தில் வாய்க்காலிற்கு அருகில் சிறுமி சென்றபோது, அவர் அணிந்திருந்த செருப்பொன்று தவறி வாய்க்காலுக்குள் விழுந்துள்ளது. அதை எடுக்க முயன்றபோது, சிறுமி வாய்க்காலுக்குள் தவறி விழுந்துள்ளார்.

தவறி விழுந்த சிறுமி வாய்க்கால் வெள்ளத்தில் 500 மீற்றர் அடித்துச் செல்லப்பட்டுள்ளார்.

சற்று நேரத்தின் பின்னர், பிள்ளையை குடும்பத்தினர் தேட ஆரம்பித்தனர். இந்த சமயத்தில் அந்த வீதியின் ஊடாக புல் வெட்ட சென்ற நபரொருவர் சிறுமியின் சடலத்தை அவதானித்து தகவல் வழங்கியுள்ளார்.

இதனையடுத்து சடலம் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக கந்தளாய் வைத்தியசாலைக்கு கொண்டு செல்லப்பட்டது.

பிரேத பரிசோதனையின் பின்னர் சடலம் உறவினர்களிம் ஒப்படைக்கப்பட்டு, பத்தாம் கொலனியில் உள்ள அல் அக்ஸா மையவாடியில் நேற்று சனிக்கிழமை நல்லடக்கம் செய்யப்பட்டதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.

மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்