பரீட்சார்த்திகளுக்கு வழங்கப்பட்ட அறிவுறுத்தல்
கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சையை நாளைய தினம் ஆரம்பிப்பதற்கான சகல ஏற்பாடுகளும் பூர்த்தியாகியுள்ளதாகப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
குறித்த பரீட்சை எதிர்வரும் 20ஆம் திகதி வரை 2, 312 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை கல்விப்பொதுத் தராதர உயர்தரப் பரீட்சைக்கு 320, 183 பரீட்சார்த்திகள் தோற்றவுள்ளனர்.
அவர்களில் பாடசாலை ரீதியிலான விண்ணப்பதாரர்கள் 253, 390 பேரும் 79, 793 தனியார் விண்ணப்பதாரர்களும் உள்ளடங்குகின்றனர்.
இதேவேளை, நாளை ஆரம்பமாகவுள்ள கல்விப் பொதுத் தராதரப் பத்திர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளுக்கு மாத்திரமே பரீட்சை நிலையங்களுக்குள் கைபேசிகளைப் பயன்படுத்த அனுமதிக்கப்படும் எனப் பரீட்சைகள் திணைக்களம் அறிவித்துள்ளது.
விசேட செய்தியாளர் சந்திப்பொன்றில் கலந்துகொண்டு நேற்று சனிக்கிழமை பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் அமித் ஜயசுந்தர இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
பொறுப்பதிகாரிகளுடன் தொடர்பு கொள்வதற்கான தேவை உள்ளதால் அவர்களுக்கு கைபேசி பாவனைக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
மேலதிக பரீட்சை மண்டப பொறுப்பதிகாரிகளாக நியமிக்கப்பட்டுள்ளவர்களும் கைபேசிகளை பயன்படுத்த முடியும்.
இம்முறை கல்விப் பொதுத் தராதரப்பத்திர உயர்தரப் பரீட்சையின் போது, பரீட்சை மண்ட உதவி பொறுப்பதிகாரிகள் அல்லது கண்காணிப்பாளர்கள் கைபேசிகளை பயன்படுத்த அனுமதிக்கப்படமாட்டாது எனப் பரீட்சைகள் ஆணையாளர் நாயகம் தெரிவித்துள்ளார்.