மாற்று மதத்தவரை காதலித்த தங்கையின் தலையுடன் பொலிஸாரிடம் சரணடைந்த அண்ணன்
உத்தரபிரதேச மாநிலம் பதேபூர் மாவட்டம் மித்வாரா கிராமத்தை சேர்ந்த இளம்பெண் ஆசிபா (வயது – 18). இவரது சகோதரர் ரியாஸ் (வயது 22). இதனிடையே, ஆசிபாவும் அதே கிராமத்தை சேர்ந்த சந்த் பாபு என்ற இளைஞரும் காதலித்து வந்துள்ளனர். காதலர்கள் இருவரும் கடந்த சில நாட்களுக்கு முன் வீட்டை விட்டு வெளியேறியுள்ளனர். இதையடுத்து, ஆசிபாவின் குடும்பத்தினர் பொலிஸாரிடம் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் வழக்குப்பதிவு செய்த பொலிஸார் ஆசிபாவையும் அவரது காதலன் சந்த் பாபுவையும் கண்டுபிடித்தனர்.
பொலிஸார் ஆசிபாவை அவரது குடும்பத்தினரிடம் ஒப்படைத்து விட்டு சந்த் பாபுவை கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்நிலையில், மாற்று மதத்தை சேர்ந்த நபரை காதலித்து அவருடன் வீட்டை விட்டு வெளியேறியது தொடர்பாக ஆசிபாவுக்கு அவரது அண்ணன் ரியாசுக்கும் இடையே நேற்று வெள்ளிக்கிழமை வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது. வாக்குவாதம் முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த ரியாஸ் வீட்டில் இருந்த கூர்மையான ஆயுதத்தால் தங்கை ஆசிபாவின் தலையை வெட்டியுள்ளார்.
பின்னர் வெட்டி எடுத்த ஆசிபாவின் தலையுடன் வீட்டில் இருந்து நடந்தே பொலிஸ் நிலையத்திற்கு சென்று சரணடைந்துள்ளார். இதையடுத்து, ரியாசை கைது செய்த பொலிஸார் ஆசிபாவின் தலையை அவரிடமிருந்து கைப்பற்றினர். பின்னர், வீட்டில் கிடந்த ஆசிபாவின் தலையில்லா உடலையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர்.
இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
மேலும் பல செய்திகளை அறிந்து கொள்ள மின்னல்24 இணையத்தளத்தை பார்வையிடவும்