இலங்கையின் பொருளாதார வீழ்ச்சியை வங்குரோத்து நிலை என்று கூறுவது தவறானது. அரசாங்கம் ஒருபோதும் வங்குரோத்து நிலைப் பிரகடனத்தைச் செய்யவில்லை என்று நிதியமைச்சின் செயலாளர் மகிந்த சிறிவர்தன தெரிவித்துள்ளார்
பொருளாதார நெருக்கடிக்கான காரணங்களை ஆராய்வதற்கு ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் பொதுச்செயலாளர் சாகர காரியவாசம் தலைமையில் நியமிக்கப்பட்ட பாராளுமன்ற தெரிவுக்குழு முன்னிலையில் சாட்சியமளிக்க கடந்தவாரம் சிறிவர்தன அழைக்கப்பட்டார்.
அந்த தெரவுக்குழுவின் உத்தியோகபூர்வமான பெயர் ‘ நிதி வங்குரோத்துக்கான காரணங்களை ஆராய்வதற்கான பாராளுமன்ற தெரவும்குழு ‘ என்பதாகும்.
அந்த பெயரே தவறானது என்று தெரிவுக்குழு முன்னிலையில் கூறிய நிதியமைச்சின் செயலாளர் தனக்கு அந்த பெயர் குறித்து கடுமையான விசனம் இருப்பதாகக் குறிப்பிட்டார்.
” நாடு வங்குரோத்து நிலை அடைந்ததாக ஒருபோதும் பிரகடனப் படுத்தப்படவில்லை.2022 ஏப்பில் மாதம் 12 ஆம் திகதி செய்யப்பட்டது கடன் மீள்செலுத்துகை இயங்கா நிலைப் பிரகடனமேயாகும். குறிப்பிட்ட கடன்களை குறிப்பிட்ட ஒரு காலப்பகுதிக்கு நாடு திருப்பிச்செலுத்தப்போவதில்லை என்பதே அதன் அர்த்தமாகும்.
“கடன் மறுசீரமைப்புத் திட்டம் ஒன்றுக்கு நாம் செல்லவிருந்ததால் எமது கடன்களை திருப்பிச் செலுத்துவதற்கு கடன் வழங்கும் நாடுகளிடமும் நிதி நிறுவனங்களிடமும் கால அவகாசத்தை நாம் கோரினோம். வங்குரோத்து என்ற பதத்தை நாம் ஒருபோதும் பயன்படுத்தவில்லை” என்று தெரிவுக்குழு முன்னிலையில் அவர் தெரிவித்துள்ளார்
நிதியமைச்சராக இருக்கும் ஜனாதிபதி ரணில் லிக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச உட்பட அரசாயல்வாதிகளும் நீதிமன்றங்களும் கூட வங்குரோத்து என்ற பதத்தை பரவலாக பயன்படுத்துவதை சிறிவர்தனவிடம் தெரிவுக்குழுவின் உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியபோது செயல்நுட்ப அடிப்படையில் வங்குரோத்து என்பது சரியான பதம் அல்ல. நாம் ஒருபோதும் வங்குரோத்து நிலையைப் பிரகடனம் செய்யவில்லை என்று பதிலளித்தார்.