அரசியல் கட்சிகளை சார்ந்த அமைப்புகளுக்கு நகர சபை காணி தாரை வார்ப்பு

 

-மன்னார் நிருபர்-

வவுனியா நகரசபைக்குரிய காணிகள் அரசியல் கட்சிகளை சார்ந்த சங்கங்களுக்கு எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி தாரைவார்க்கப்பட்டு வருவதாக வவுனியா மாவட்ட உதைபந்தாட்ட சங்கத்தின் தலைவர் இலங்கை உதைபந்தாட்ட சங்கத்தின் உப பொருளாளருமான அ.நாகராஜன் தெரிவித்துள்ளார்.

வவுனியாவில் முச்சக்கர வண்டி உரிமையாளர் சங்கத்திற்கு நகர சபையின் காணிகளை எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி வழங்கப்பட்டுள்ளமை தொடர்பில் கண்டித்து இன்று செவ்வாய்க்கிழமை கருத்து தெரிவிக்கையில் அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

வவுனியா நகரசபையின் ஆதனங்கள் பரந்து காணப்படுகின்றது. இவை மக்களின் நலன் கருதி பயன் படுத்துவதற்காக பல்வேறு தீர்மானங்களை நகர சபை அமர்வுகளில் எடுக்கப்பட்ட போதிலும் அது தொடர்பில் நகரசபை தலைவர் அசமந்தம் காட்டி வருகின்றமையினால் எவ்வித அபிவிருத்திகளும் இடம்பெறவில்லை.

இந்நிலையில் தேசிய மட்டத்தில் பல்வேறு சாதனைகளை படைத்து சமூக நலன்கருதி செயற்பட்டு வரும் வவுனியா உதை பந்தாட்ட அணிகளை உள்ளடக்கிய வவுனியா உதைபந்தாட்ட சங்கம் இது வரை தனக்கான கட்டிட வசதியின்றி காணப்படுகின்றது.

இது தொடர்பில் வவுனியா நகரசபை தலைவருடன் கலந்துரையாடிய போது நகரசபை காணிகளை சங்கங்களுக்கு வழங்க முடியாது என தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் அரசியல் கட்சிகளின் ஆதரவாளர்களை முன்னிலைப்படுத்திய சங்கங்களுக்கு நகரசபையின் காணிகளை எவ்வித ஒப்பந்தங்களும் இன்றி நகரசபை வழங்கி வருகின்றமை பக்கச்சார்பான நடவடிக்கையாகவே பார்க்கின்றேன்.

விளையாட்டுத் துறையினை வளர்க்க வேண்டிய பொறுப்பில் உள்ள நகரசபை அதை புறந்தள்ளிவிட்டு வருமானமீட்டும் சங்கமொன்றிற்கு காணியை வழங்கி யிருக்கின்றமை தொடர்பில் சந்தேகம் எழுகின்றது.

இதற்காக கிடைக்கப்பெற்ற பிரதியுபகாரங்கள் தொடர்பாக வடமாகாண உள்ளூராட்சி ஆணையாளர் மற்றும் ஆளுநர் ஆராய வேண்டும்.

இதேவேளை நகரசபையின் இவ்வாறான செயற்பாடு சட்டவிரோதமாக நகரசபையின் காணிகளை கையகப்படுத்தி யுள்ளோர் அக்காணிகளை தமக்கு உரிமை கோருவதற்கு வாய்ப்பாக அமையும் என்பதனையும் நகரசபை தலைவர் உட்பட்ட உறுப்பினர்களுக்கு சுட்டிக்காட்ட முனைகின்றேன்.

எனவே வவுனியா நகரில் பலவிதமான அபிவிருத்தி பணிகள் மக்கள் நலன்சார்ந்து எடுக்கப்பட வேண்டியுள்ள நிலையில் வவுனியா நகரசபையின் இவ்வாறான தான்தோன்றித்தனமான செயல்பாடு வவுனியாவிற்கான அழிவின் ஆரம்பம் என்பதனையும் சுட்டிக்காட்ட விரும்புகிறேன் என தெரிவித்துள்ளார்.