நாட்டில் நிலவும் சீரற்ற வானிலை காரணமாக, மட்டக்களப்பு மாவட்டத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
வாழைச்சேனை பொலிஸ் பிரிவிலுள்ள, ஊத்துச்சேனை வயல் பகுயில் உள்ள கால்வாயில் இருந்து, உயிரிழந்த நிலையில் விவசாயி ஒருவரின் சடலம், நேற்று செவ்வாய்க்கிழமை மாலை மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
வாகனேரி குளத்துமடுவைச் சேர்ந்த செல்லத்துரை கோபால் (வயது 46) என்ற விவசாயியே இவ்வாறு சடலமாக மீட்கப்பட்டுள்ளார்.
நேற்று மட்டக்களப்பு மாவட்டத்தில் பல பகுதிகளில் பலத்த மழை பெய்த நிலையில், குறித்த விவசாயி தனது வயலுக்கு சென்ற வேளை இவ்வனர்த்தம் நேர்ந்துள்ளது.
நீதிமன்ற அனுமதியை பெற்று, சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக வைத்தியசாலையில் ஒப்படைத்த வாழைச்சேனை பொலிசார், மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
இதேவேளை, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தினால் இன்று புதன்கிழமை முற்பகல் 10.00 மணிக்கு வெளியிடப்பட்ட அறிக்கையில், சீரற்ற காலநிலையினால் 4 மாவட்டங்களில் 17 பிரதேச செயலாளர் பிரிவுகளில் வசிக்கும் மக்கள் பாதிக்கப்பட்டுள்ளதாகக் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, 62 குடும்பங்களைச் சேர்ந்த 203 நபர்கள் இதுவரை பாதிக்கப்பட்டுள்ளனர்.
அவர்களில் 17 பேர் தற்காலிகப் பாதுகாப்பு மையங்களில் தங்கவைக்கப்பட்டுள்ளதாக, அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது.
மேலும், 39 வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதாகவும் அந்த நிலையம் மேலும் தெரிவித்துள்ளது.