-அம்பாறை நிருபர்-
நீண்ட காலமாக, இரு வேறு இடங்களில் போதைப் பொருட்களை விற்பனை செய்து வந்த சந்தேக நபர்களை, நேற்று ஞாயிற்றுக்கிழமை, சாய்ந்தமருது பொலிஸார் கைது செய்துள்ளனர்.
அம்பாறை மாவட்டம் சாய்ந்தமருது பொலிஸ் நிலையத்திற்கு உட்பட்ட புறநகர் பகுதியில், நீண்ட காலமாக போதைப்பொருட்கள் விற்பனை செய்யப்படுவதாக அம்பாறை மாவட்ட புலனாய்வு உத்தியோகத்தருக்கு இரகசிய தகவல் கிடைக்கப் பெற்றிருந்தது.
குறித்த தகவலுக்கமைய, கடந்த சனிக்கிழமை மாலை சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார் விசேட தேடுதல் நடவடிக்கையில் ஈடுபட்டிருந்தனர்.
இதன்போது, சாய்ந்தமருது-14 பிரிவில் வசித்துவரும் சந்தேக நபர் 2220 மில்லி கிராம் ஐஸ் போதைப்பொருள் மற்றும் போதைப் பொருளை விற்று பெறப்பட்ட ஒரு தொகுதி பணத்துடன் கைதானார்.
இதே வேளை மற்றுமொரு சந்தேக நபர், மாவடி பகுதியில், 2300 மில்லி கிராம் ஹெரோயின், 60 மில்லிகிராம் ஐஸ் போதைப் பொருள் ஆகியவற்றை விற்பனைக்கு தயாராக வைத்திருந்த நிலையில் கைது செய்யப்பட்டார்.
கிழக்குப் பிராந்தியத்திற்குப் பொறுப்பான சிரேஸ்ட பிரதிப் பொலிஸ் மா அதிபர் சட்டத்தரணி வருண ஜெயசுந்தரவின் உத்தரவின் பேரில், அம்பாறை பிரிவுக்குப் பொறுப்பான பிரதி பொலிஸ் மா அதிபர் சுஜித் வேதமுல்லவின் பணிப்புரைக்கமைய, சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரியந்த பண்டார கஸ்தூரியாராச்சி நெறிப்படுத்தலில், கல்முனை பிராந்திய உதவி பொலிஸ் அத்தியட்சகர் எம்.கே.இப்னு அசார் வழிகாட்டுதலின், சாய்ந்தமருது பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி பொலிஸ் பரிசோதகர் டி.எஸ்.இந்திக தலைமையிலான பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்