கந்தளாய் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை மாலை அடுத்தடுத்து இடம்பெற்ற இரு வேறு விபத்துக்களில் பெண் ஒருவர் உட்பட நால்வர் காயமடைந்து கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் மோதி விபத்து
கந்தளாய் போட்டங்காடு பகுதியிலிருந்து, நகரை நோக்கி அதிவேகமாக வந்த மோட்டார் சைக்கிள் ஒன்று, கந்தளாய் ரணவீர கடைக்கு முன்னால் வீதியைக் கடக்க முயன்ற பெண் மீது மோதி விபத்துக்குள்ளானது.
இந்த விபத்தில் குறித்த பெண்மணியும், மோட்டார் சைக்கிள் ஓட்டுநரும் காயமடைந்து வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
பேராறு பகுதியில் மற்றுமொரு விபத்து
கந்தளாய் பேராறு பகுதி மார்க்கான் சந்தியில் மற்றுமொரு மோட்டார் சைக்கிள் விபத்து இடம்பெற்றுள்ளது.
கோழிக் கடையில் இறைச்சியை பெற்றுக்கொண்டு, தனது மோட்டார் சைக்கிளை வீதிக்கு எடுக்க முற்பட்டபோது, பேராறு பகுதியிலிருந்து வெலிங்டன் சந்தி நோக்கிச் சென்ற மற்றுமொரு மோட்டார் சைக்கிளுடன் மோதி இந்த விபத்து நிகழ்ந்துள்ளது.
இந்த விபத்திலும் காயமடைந்த இரண்டு பேரும் கந்தளாய் ஆதார வைத்தியசாலையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
இச்சம்பவங்கள் குறித்து கந்தளாய் போக்குவரத்து பொலிஸார் மேலதிக விசாரணைகளை முன்னெடுத்து வருகின்றனர்.