பலத்த பாதுகாப்புக்கு மத்தியில் திருமலையில் உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனு கையேற்கும் இறுதி நாள் நிகழ்வு

-கிண்ணியா நிருபர்-

உள்ளூராட்சிமன்ற தேர்தலுக்கான வேட்புமனுவுக்கான பத்திரம் தாக்கல் செய்யும் இறுதி நாளான இன்று சனிக்கிழமை நண்பகல் 12.00 மணியுடன் நிறைவுக்கு வந்தது. அந்த வகையில் திருகோணமலை மாவட்ட செயலகத்திலும் வேட்பு மனு பத்திரம் தாக்கல் செய்யும் நிகழ்வு இடம் பெற்றது இதில் கட்சிகள், சுயேட்சைக் குழு என வேட்பு மனு தாக்கலை செய்தது.

இதன் போது அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தேசிய அமைப்பாளரும் முன்னால் பிரதியமைச்சருமான அப்துல்லா மஹ்ரூப் கருத்துரைக்கையில்,

மக்கள் காங்கிரஸ் என்பது எல்லோருக்கும் பொதுவான இன மத பேதமற்ற கட்சியாகும் இதில் தேசிய மட்டத்தில் 300க்கும் மேற்பட்ட உறுப்பினர்களை இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் வெற்றி கொள்வோம் மேலும் திருகோணமலை மாவட்டத்தில் ஐந்து சபைகளை நேரடியாக கைப்பற்றுவோம் என்றும் எமது தலைவர் றிசாதை வீண் பழி சுமத்தி அப்பட்டமாக கைது செய்தனர்.

1947 க்குப் பின்னர் எந்தவொரு பாராளுமன்ற உறுப்பினரும் பயங்கரவாத தடைச் சட்டத்தின் கீழ் கைதாகவில்லை ஆனால் சபாநாயகர் தொடக்கம் உயர் சபையின் ஊடாக அவர் குற்றமற்றவர் என்று கூறப்பட்ட போதிலும் அவர் மீது சேறு பூசினர் இவற்றுக்கெல்லாம் இந்த தேர்தல் றிசாத் யார் என்பதை அவர்கள் புரிந்து கொள்வர் என்றார்.

இதன் பின் ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் மூதூர் தொகுதி அமைப்பாளர் சட்டத்தரணி எச்.எம்.எம்.பாயிஸ் தெரிவிக்கையில்,

நாட்டின் நல்லதொரு விடயத்துக்காக தேர்தலை பிற்போடுவதாக இருந்தால் அதில் எந்த வித ஆட்சேபனையும் இல்லை எங்களது கட்சி தேர்தலுக்கு முகங்கொடுக்கத் தயார், என்றார்.