இன்று மதியம் 12 மணியுடன் வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை நிறைவு

-கிண்ணியா நிருபர்-

2023 உள்ளூராட்சி மன்றத்தேர்தலில் திருகோணமலை மாவட்டத்தில் உள்ள 13 உள்ளூராட்சி சபைகள் சார்பாக அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகள் 22,  சுயேட்சைக்குழுக்கள் 15,  வேட்புமனு தாக்கலுக்கான 178 கட்டுப்பணங்களை செலுத்தியுள்ளதாக மாவட்ட தெரிவத்தாட்சி அலுவலரும் அரசாங்க அதிபருமான பி. எச். என்.ஜயவிக்ரம தெரிவித்தார்.

கட்டுப்பணங்கள் செலுத்துவதற்காக நேற்று வெள்ளிக்கிழமை மதியம் 12 மணிவரை அவகாசம் வழங்கப்பட்டிருந்தது.

கடந்த புதன்கிழமை தமிழ் மக்கள் விடுதலைப்புலிகள் கட்சி மூதூர் மற்றும் வெருகல் பிரதேச சபைகளுக்கு வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தது.

நேற்றுமுன்தினம் எந்தவொரு அரசியல் கட்சியோ சுயேட்சை குழுவோ மாவட்டத்தில் வேட்பு மனுக்களை தாக்கல் செய்ய முன்வரவில்லை.

நேற்று மொத்தமாக 19 வேட்புமனுக்கள் தாக்கல் செய்ப்பட்டிருந்தன.

சிறிலங்கா பொதுஜன பெரமுன கந்தளாய், தம்பலகாமம், மொரவெவ, கோமரங்கடவெல, பதவிசிறீபுர, கிண்ணியா, குச்சவெளி, மூதூர் ஆகிய பிரதேச சபைகள் உட்பட கிண்ணியா நகர சபைக்கும், முன்னிலை சோசலிச ஜனநாயக கட்சி சேருவல, கந்தளாய், பதவிசிறீபுர மற்றும் பட்டினமும் சூழலும் பிரதேச சபைகளுக்கும் அகில இலங்கை தமிழர் மகாசபை வெருகல் பிரதேச சபைக்கும், ஐக்கிய தேசிய சுதந்திர முன்னணி குச்சவெளி பிரதேச சபைக்கும் இரு சுயேட்சைக்குழுக்கள் பட்டினமும் சூழலும் பிரதேச சபைக்கும் இன்னும் இரு சுயேட்சைக்குழுக்கள் திருகோணமலை மாநகர சபைக்கும் வேட்புமனுக்களை தாக்கல் செய்திருந்தன.

இன்று சனிக்கிழமை மதியம் 12 மணியுடன் வேட்பு மனு ஏற்கும் நடவடிக்கை நிறைவுபெறவுள்ளமை குறிப்பிடத்தக்கது.